< Back
மாநில செய்திகள்
கலாஷேத்ரா பாலியல் புகார் - பேராசிரியர் ஹரிபத்மன் கைது
மாநில செய்திகள்

கலாஷேத்ரா பாலியல் புகார் - பேராசிரியர் ஹரிபத்மன் கைது

தினத்தந்தி
|
3 April 2023 8:28 AM IST

பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஐதராபாத்தில் கைது செய்தது சென்னை காவல்துறை.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமரி தெரிவித்தார்.

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கலாஷேத்ராவில் கடந்த 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவி ஒருவர், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ஹரிபத்மன் என்ற ஆசிரியர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாகவே கலாஷேத்ராவில் முதுகலையை தொடர முடியாமல் வெளியேறதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவாகியுள்ளார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்தநிலையில் கேரள பெண்னின் புகாரை விசாரித்த தனிப்படை போலீசார் ஹரி பத்மனை ஐதராபாத்தில் கைது செய்தனர். பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரியின் உதவி நடன ஆசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த நடன பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்