< Back
மாநில செய்திகள்
கலாஷேத்ரா விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
மாநில செய்திகள்

கலாஷேத்ரா விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

தினத்தந்தி
|
10 April 2023 6:26 PM IST

கலாஷேத்ரா விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கலாஷேத்ரா விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடரப்பட்ட இந்த விவாதம் நாளடைவில் நேரடியாக போராட்டமாக மாறி, பின்பு தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தின.

இது தொடர்பாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

நாளிதழில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து இந்த விசாரணையை நடத்த இருப்பதாக மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆறு வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி தலைமையில் காவலர்கள் நேரடியாக விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இந்த விசாரணைக்குழு நேரடியாக கலாஷேத்ரா மையத்திற்கு சென்று விசாரணையை தொடங்குவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்