தஞ்சாவூர்
50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
|50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
ஒரத்தநாடு அருகே முத்தம்மாள்புரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன காலசம்ஹார மூர்த்தி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்டு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
காலசம்ஹாரமூர்த்தி சிலை திருட்டு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள முத்தம்மாள்புரம் கிராமத்தில் உள்ளது காசிவிஸ்வநாதர் கோவில். இந்த கோவிலின் செயல் அலுவலர் சுரேஷ், சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
காசிவிஸ்வநாதர் கோவிலில் பழங்கால காலசம்ஹாரமூர்த்தி வெண்கல சிலை இருந்தது. இந்த சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு அதற்கு பதிலாக போலியான சிலை செய்து வைக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி பழங்கால காலசம்ஹாரமூர்த்தி சிலையை மீட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு கோவிலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோழர் காலத்தை சேர்ந்தது
வெண்கல சிலையான அந்த சிலை சிவன் திரிபுரவிஜயாவின் அரிய தோற்றம் ஆகும். 1050-ம் ஆண்டு சோழர் காலத்தை சேர்ந்தது. அந்த சிலை 82.3 செ.மீ. உயரம் உடையது. ஒரு செவ்வக பீடத்தின் மீது உயர்த்தப்பட்ட ஒரு புரட்டாசி குள்ளனின் பின்புறத்தில் ஒரு காலுடன் வெற்றியுடன் நின்று உடலை ஒரு வேகமான திரிபங்கா தோரணையில் எடுத்துச்சென்று சுருக்கமான வேட்டியை அணிந்து பல்வேறு நகைகளால் அலங்கரிக்கப்பட்டது.
ஒரு கையில் வில் அம்பும், மற்றொரு கையில் தேன் மற்றும் சிறிய மான் ஆகியவற்றை பிடித்திருக்கும் வகையில் இடம் பெற்று இருந்தது. உயரமான ஜட மகுடத்தால் உயர்ந்து நிற்கும் நம்பிக்கையுடன் கூடிய முகம் மற்றும் பல்வேறு நகைகள், மலர்கள், பாம்புகள் மற்றும் பிறை நிலவு ஆகியவற்றுடன் அந்த சிலை காணப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை
புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை அதிகாரியாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா நியமிக்கப்பட்டார். அதன் பேரில் அவர் போலீசாருடன் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார்.மேலும் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தை அணுகி கோவிலில் எடுக்கப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட சிலைகளின் புகைப்படங்களை கோரினர். அதன்படி புகைப்படங்களை பெற்று உலகில் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், ஏல மையங்கள் மற்றும் தனியார் சிலை சேகரிப்பாளர்களின் சிற்றேடுகளில் சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்டார்.
அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
இவ்வாறு தேடியபோது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இணையதளத்தில் காணாமல் போன சிலையை போன்ற ஒரு சிலை அமெரிக்காவில் உள்ள ஒரு ஏல நிறுவனத்திடம் இருந்ததை (பழங்கால கலைப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம்) கண்டுபிடித்தனர்.
அந்த சிலை முத்தாம்பாள்புரம் காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலை என்பதும் தெரிய வந்தது.
மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை
இதையடுத்து அந்த சிலையை மீட்டு கொண்டு வருவதற்கான முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு அதற்கான ஆவணங்களை மத்திய அரசுக்கும், சிலையை திருப்பி அனுப்புவதற்கான ஆவணங்களை தயாரித்து அமெரிக்காவிடமும் சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.