திருவாரூரில் ஜூன் 20ஆம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு..!
|திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ந் தேதியில் இருந்து வெகு விமரிசையாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதையொட்டி 3-ந் தேதி மாலை வடசென்னையில் தி.மு.க. தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 20-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேரில் வந்து திறந்து வைக்கிறார். ஏற்கனவே ஜூன் 15-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த கோட்டத்தில், கருணாநிதியின் இளமை கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களோடு கருணாநிதி ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள் கட்டுரைகள் என காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தின் முன்பக்கத்தில் மளிகை கற்களால் கலைஞர் திருவுருவ சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.