கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு - தமிழக அரசு தகவல்
|மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசின் 'கலைஞர் உரிமைத்தொகை திட்டம்' கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல லட்சம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் பலரது மனுக்கள் தள்ளுபடி ஆனது. இவர்களில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தங்கள் பெயரை சேர்க்கக்கோரி அக்டோபர் 25-ந்தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கு நவம்பர் 25-ந்தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.