< Back
மாநில செய்திகள்
கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி பயணம்
மாநில செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு 'முத்தமிழ் தேர்' அலங்கார ஊர்தி பயணம்

தினத்தந்தி
|
4 Nov 2023 10:53 PM IST

கன்னியாகுமரியில் இருந்து பேனா வடிவிலான கலைஞர் நூற்றாண்டு ‘முத்தமிழ் தேர்' அலங்கார ஊர்தி புறப்பட்டது. இந்த ஊர்தி அடுத்த மாதம் 4-ந் தேதி சென்னை சென்றடைகிறது.

கன்னியாகுமரியில் முத்தமிழ் தேர்

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றான தமிழ்நாடு அரசின் எழுத்தாளர்-கலைஞர் குழுவின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் உள்ள முக்கோண பூங்காவில் நடைபெற்றது.

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சரும், எழுத்தாளர்- கலைஞர் குழுவின் தலைவருமான அமைச்சர் பெரிய கருப்பன் முத்தமிழ்த்தேரை முரசுகொட்டி தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

டிசம்பர் 4-ந் தேதி...

முடிவில் எழுத்தாளர்- கலைஞர் குழு உறுப்பினர் செயலாளரும், சமூக நலத்துறை ஆணையருமான அமுதவல்லி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றிய பாடல்களுக்கும், தமிழ் மொழியை பற்றிய பாடல்களுக்கும் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய முத்தமிழ் தேர் வாகன ஊர்தி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்கள் வழியாக அடுத்த மாதம் 4-ந் தேதி சென்னையை சென்றடைகிறது.

மேலும் செய்திகள்