'கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் தமிழ்நாட்டின் அறிவாலயம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
|தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், கலைநகராக திகழ்வது மதுரை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரை,
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார்.
நூலக வளாகத்தில் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையையும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில் அமைக்கப்பட்ட மருத்துவமனையும், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகமும். இவை இரண்டும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், தமிழ்நாட்டின் கலைநகராக திகழ்வது மதுரை. தலைநகரில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் கருணாநிதி அமைத்தார். இன்று கலைஞர் நூற்றாண்டில் இந்த கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்னும் தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை இந்த அடியேன் அமைத்துள்ளேன். இந்த நூலகத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்ததை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.