கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்
|கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
சென்னை,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் (23-ம் தேதி) இன்று தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் வேளாண்மை துறை மூலம் நெட்டை தென்னங்கன்றுகள், பயிறு வகை விதைகள் விநியோகம், கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் விநியோகம் செய்யப்படும். தோட்டக்கலை மூலம் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான தளைகள் மற்றும் ஊக்கத்தொகை போன்றவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.
இத்திட்டமானது வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை, முன்னோடி வங்கி, வனத்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்ட உள்ளது.