< Back
மாநில செய்திகள்
வைரமுத்து உள்ளிட்ட 4 கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய கலைஞர் 100 ஒலித்தகடு
மாநில செய்திகள்

வைரமுத்து உள்ளிட்ட 4 கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய 'கலைஞர் 100' ஒலித்தகடு

தினத்தந்தி
|
18 Jun 2023 5:45 AM IST

வைரமுத்து உள்ளிட்ட 4 கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய ‘கலைஞர் 100’ ஒலித்தகட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

'கலைஞர் 100'

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தலைமையிலான கவிஞர்கள் குழு எழுதியுள்ள பாடல்கள் அடங்கிய 'கலைஞர் 100 பாடல்கள்' ஒலித்தகட்டை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி., கவிஞர் வைரமுத்து உள்பட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

எழுச்சி தரும் பாடல்கள்

இதையடுத்து, கவிஞர் வைரமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒலித்தகட்டை வெளியிட்டிருக்கிறார். அது ஒலித்தகடு என்று சொல்வதை விட, கருணாநிதி நூற்றாண்டுக்கு கவிஞர்கள் செதுக்கியிருக்கும் கல்வெட்டு என்று சொல்ல வேண்டும்.

4 கவிஞர்களான நாங்கள் கவிதை எழுதியிருக்கிறோம். கபிலன், பா.விஜய், விவேகா மற்றும் நான் (வைரமுத்து) ஆகிய 4 பேர் பாடல் எழுதியிருக்கிறோம். அந்த 4 பாட்டுக்கும் இசை அமைத்திருக்கிறார் பரத்வாஜ். அந்த 4 பாடல்களும் கருணாநிதியின் புகழ் பாடுகிற பாடல்கள் மட்டுமல்ல, இளைஞர்களுக்கு எழுச்சி தருகின்ற பாடல்கள்.

பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவதுதான் மிகச்சரியாக இருக்கும்.அந்த திருவாரூரில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுவதுதான் சிறந்தது. என்ன செய்வது, அது மத்திய அரசின் கையில் இருக்கிறது.

கவர்னர் அந்த மண்ணின் பண்பாடு, மொழியோடு கலந்தவராக திகழ வேண்டும். அந்த நாட்டின் மக்களின் மனிதாபிமானத்தோடும், மனதோடும் கலந்தவராக கவர்னர் திகழ வேண்டும். அப்படி திகழ்வதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி முயற்சி செய்வார் என்று நான் நம்புகிறேன்.

கைது என்பதற்கு அமலாக்கத்துறைக்கு உரிமை இருப்பதாகவும், அவர்களுக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருக்கட்டும். உங்கள் அதிகாரத்தின்படி, உரிமையின்படி கைது செய்திருக்கிறீர்கள். என்பதெல்லாம் சரி, கைது செய்த முறை சரியா? அவர் (செந்தில் பாலாஜி) அமைச்சர் அல்லவா? தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி அல்லவா? செந்தில் பாலாஜி என்பவர் ஒரு தனிமனிதரா? இல்லை தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருக்கிற ஒருவர் தாக்கப்பட்டால், அவமதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நாட்டு மக்களின் மனதையும் அவர்கள் தங்கள் 'பூட்ஸ்' காலால் மிதிக்கிறார்கள் என்று பொருள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் பற்றி வைரமுத்து கருத்து

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு, "அரசியலுக்கு நான் வருவேனா? என்று கேட்டால் நான் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவதை பற்றி எனக்கு இப்போது ஒன்றும் தெரியாது. தெரியாமல் சொல்வது என்பது உசிதமாக இருக்காது" என்று வைரமுத்து பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்