தூத்துக்குடி
தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்களுக்கு பலத்த பாதுகாப்பு
|தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறும் முகாமில் அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் கவனமாக ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.
சிறப்பு முகாம்
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வதற்காக ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு தோறும் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 600 ரேஷன் கடைக்கு உட்பட்ட பகுதிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இந்த முகாம்களில் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் முகாம்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
போலீசாருக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்து வரும் முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம், பொதுமக்களை அமைதியான முறையில் வரிசைப்படுத்தி, அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில் பாதுகாப்பு பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அப்போது தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.