கச்சத்தீவு விவகாரம்: 1974-ல் கருணாநிதி சொன்னது என்ன? நடந்த முழு விவரம்- பரபரப்பு தகவல்கள்
|கச்சத்தீவு விவகாரம் இப்போது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
1974-ம் ஆண்டு கச்சத்தீவை வழங்க உண்மையிலேயே கருணாநிதி சம்மதம் தெரிவித்தாரா? அப்போதைய கால கட்டத்தில் நடந்தது என்ன என்ற விவரங்களை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அன்றைய நாட்களில் தினத்தந்தியில் வந்த செய்திகளை வாசகர்களின் பார்வைக்கு வழங்குகிறோம்.
தேதி: 28.06.1974
இலங்கைக்கு கச்சத்தீவு தானம்; டெல்லி கொடுத்தது!!
சென்னை,
தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு கொடுக்க டெல்லி சர்க்கார் முடிவு செய்துள்ளது. இந்த தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்றும், இலங்கைக்கு கொடுக்கக்கூடாது என்றும் தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. அதற்குமாறாக, இலங்கைக்கு கச்சத்தீவை டெல்லி கொடுக்கிறது.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இது இருக்கிறது.
ராமநாதபுரம் ராஜா
முன்பு இந்தத் தீவு, ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று, சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது.
திருமதி பண்டாரநாயக்
இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் கடந்த ஜனவரி மாதம் டெல்லி வந்திருந்தபோது பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார்.கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று, அப்போது தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசு
"கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது" என்று, தமிழக அரசு வற்புறுத்தி வந்தது.முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தபோது, இதை வலியுறுத்தினார்.
தானம்
இப்போது, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று டெல்லி சர்க்கார் முடிவு செய்துவிட்டது.இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியிலும், இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியாகும்.
280 ஏக்கர்
கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரைமைல் அகலமும் உள்ளது.அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள்.இரு தேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு குடி தண்ணீர் இல்லையாதலால், மக்கள் நிரந்தரமாக வசிக்கவில்லை.
கருணாநிதி
முதல்-அமைச்சர் கருணாநிதியை நிருபர்கள் நேற்று மாலை பேட்டி கண்டு, "கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்னால், மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டதா?" என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-"இரண்டு வாரங்களுக்கு முன்னால், வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல் சிங் இங்கு வந்தபோது, என்னிடம் அதுபற்றி சில விவரங்களை விவாதித்தார். கச்சத்தீவு விஷயத்தில் தமிழ் மக்களுடைய உணர்ச்சியை நான் அவரிடத்தில் விளக்கி இருக்கிறேன்."இவ்வாறு கருணாநிதி கூறினார்.
கண்ணீர்
"ராமநாதபுரம் ராஜா" ராமநாத சேதுபதி நிருபர்களிடம் கூறுகையில், "டெல்லி சர்க்காரின் முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவது தவிர, வேறு வழி இல்லை" என்று கூறினார்.
தேதி 29-06-1974
கச்சத்தீவு, இலங்கைக்கு தானம்: ஒப்பந்தத்தில் இந்திரா கையெழுத்து
புதுடெல்லி, ஜூன், 29-
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி நேற்று பிற்பகல் கையெழுத்திட்டார்.அதே நேரத்தில், இலங்கையிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது. ஒப்பந்தத்தில் இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் கையெழுத்திட்டார்.
இலங்கை அதிகாரி
கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை இலங்கையில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே டெல்லிக்கு நேற்று விமானத்தில் கொண்டு வந்தார். அதில் இந்திரா கையெழுத்திட்டார்.அதே போல, டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கைக்கு கொண்டு போனார். அதில், இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் கையெழுத்திட்டார்.
இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்து போடுவதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அறிக்கை
ஒப்பந்தத்தைப் பற்றி வெளியான அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-"இந்தியா, இலங்கை ஆகிய இரு தேசங்களின் நலனுக்காக, இயற்கை வளங்களை முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள இரு தேச பிரதமர்களும் ஏற்கனவே முடிவு செய்தனர். இந்த நோக்கத்துடன், இரு தேச கடல் எல்லையை வரையறுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.நட்புறவு, கூட்டுறவு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு தேசங்களுக்கும் இடையேயான எல்லையை நிர்ணயிக்க இரு பிரதமர்களும் ஏற்பாடு செய்தனர்.
ஆதாரம்
கைவசம் உள்ள சரித்திர ஆதாரங்களையும், மற்ற விவரங்களையும் ஒன்றுதிரட்டி ஆராயப்பட்டது. இலங்கையிலும், டெல்லியிலும் இதுபற்றி அதிகாரிகள் கலந்து பேசினார்கள்.சரித்திர ஆதாரங்களையும், சர்வதேச விதிகளையும், இதற்கு முன் மற்ற நாடுகள் கடைப்பிடித்த முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.இதன்படி, இந்திய எல்லைக்கோட்டை கச்சத்தீவுக்கு ஒரு மைல் மேற்கே நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிறது.
மீன் பிடித்தல்
கச்சத்தீவில் நடைபெறும் திருவிழாவுக்கு மக்கள் போவது கப்பல் போக்குவரத்து, மீன் பிடித்தல், இயற்கை வள ஆராய்ச்சி ஆகியவை குறித்து, திருப்தியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்ற பிறகு, ஒப்பந்தத்தின் முழு விவரமும் அறிவிக்கப்படும்.இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு தேசங்களுக்கும் இடையே நட்புறவு மேலும் பலம் அடையும் என்று இரு பிரதமர்களும் நம்புகிறார்கள்."இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேதி: 30.06.1974
கச்சத்தீவு ஒப்பந்தம் இலங்கையில் மகிழ்ச்சி!
கொழும்பு,
கச்சத்தீவு ஒப்பந்தம் இலங்கைக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று இலங்கையில் உள்ள தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
கச்சத்தீவு
தமிழ்நாட்டு கடற்கரைக்கு அருகே உள்ள கச்சத்தீவை இலங்கைக்கு தானம் கொடுக்க டெல்லி சர்க்கார் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்திற்கு இலங்கையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லா தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
வெற்றி
இலங்கை பிரதமர் பண்டார நாயக்கின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று ஒரு தலைவர் கூறினார்.சரித்திர புகழ் வாய்ந்த பெரும் வெற்றியை பண்டார நாயக் ஏற்படுத்தி விட்டதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
உறவு
இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு முழு அளவில் இலங்கை ஆதரவு கொடுத்தது. பாகிஸ்தான் படைகள் இலங்கை வழியாக வங்காள தேசத்திற்கு சென்றன. இதனால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கப்பட்டது.இந்தியா அணுகுண்டு வெடித்த போது இலங்கை தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.இப்போது கச்சத்தீவு கிடைத்ததால் இந்தியா-இலங்கை உறவு பலம் அடைந்துவிட்டதாக இலங்கை அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
***************
தேதி: 30.06.1974
கச்சத்தீவு"தமிழ்நாட்டுக்கே உரியது!" ஆதாரங்களுடன் இந்திராவுக்கு கருணாநிதி எழுதிய கடிதம்!!
சென்னை,
"கச்சத் தீவு இந்தியாவுக்கே சொந்தம்" என்று, ஆதாரங்களுடன் பிரதமர் இந்திரா காந்திக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதத்தின் முழு விவரமும் வெளியிடப்பட்டு உள்ளது.
கடிதம்
"கச்சத் தீவு பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று முன்பு பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்துக்கு, கடந்த ஜனவரி 6-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் எழுதினார்.
அந்த கடித விவரம் வருமாறு:-
ஆதாரங்கள்
"கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, எனது இலாகா அதிகாரிகள், கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள்.
கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒரு போதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.
வரைபடம்
நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1766-ல் ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள், இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762-ல் ஜான்சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை.1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் ("மேப்") கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.
ராமநாதபுரம் ராஜா
நீண்ட நெடுங்காலமாக, தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்து குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென் இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்கு பகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.
நிரூபிக்க முடியும்
இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக் கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக் கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது.எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும் பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, "கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல" என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகின்றேன்."இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார்.
பதில் இல்லை
கடந்த ஜனவரி மாதம் கருணாநிதி எழுதிய இந்தக் கடிதத்துக்கு, இதுவரை பதில் வரவில்லை.
---------------
தேதி: 30.06.1974
கச்சத் தீவு தானம்:"ஏற்க முடியாது" தலைவர்கள் அறிவிப்பு
கச்சத் தீவு பற்றி ஆலோசிப்பதற்காக, அனைத்துக் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அதில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியபோது எடுத்த படம்.
சென்னை,
கச்சத் தீவை இலங்கைக்கு டெல்லி சர்க்கார் தானம் செய்தது பற்றி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார். "கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது. இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும்" என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு வந்திருந்த அ. தி. மு. க. பிரதிநிதி, தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் வெளிநடப்பு செய்தார்.தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டது தெரிந்ததே.இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக, சட்டசபை, மேல்சபை ஆகியவற்றில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார்.
கூட்டம்
இந்த கூட்டம், சென்னை கோட்டையில் நேற்று காலை நடந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.கூட்டத்தில், அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.
தலைவர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-
1. பொன்னப்ப நாடார் (ப. காங்கிரஸ்)
2. ஏ. ஆர். மாரிமுத்து (இ. காங்கிரஸ்)
3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)
4. அரங்க நாயகம் (அ. தி. மு. க.)
5. வெங்கடசாமி (சுதந்திரா)
6. ஈ. எஸ். தியாகராசன் (தமிழரசு கழகம்)
7. ஏ. ஆர். பெருமாள் (பார்வர்டு பிளாக்)
8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்யூனிஸ்டு)
மேல் சபை
9. ம. பொ. சிவஞானம் (தமிழரசு)
10. ஜி. சாமிநாதன் (சுதந்திரா)
11. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)
12. ஆறுமுகசாமி (இ. காங்.)
13. சக்தி மோகன் (பா. பிளாக்)
14. ஏ. ஆர். தாமோதரன் (ஐக்கிய கட்சி)
தீர்மானம்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது:-
"இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது."
மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
வெளிநடப்பு
தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன், அ. தி. மு. க. பிரதிநிதி வெளிநடப்பு செய்தார்.
இந்தக் கூட்டத்தில் வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை. தலைவர்களோ, அல்லது அவர்களது பிரதிநிதிகளோ கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.எஸ். எஸ். ராமசாமி படையாச்சி (உழைப்பாளர் கட்சி) கார் வழியில் "ரிப்பேர்" ஆகிவிட்டதால், வரமுடியவில்லை. ஆயினும், கூட்டத்தின் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.ராஜாராம் நாயுடுவுக்கு வீட்டில் திருமண வேலைகள் இருந்ததால் வரமுடியவில்லை.பிரதமருக்குஅனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார்.
அவர் மேலும் சொன்னதாவது:-
"கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா கட்சித் தலைவர்களும், தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள்.
அ. தி. மு. க.
அ. தி. மு. க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார்.கச்சத் தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக் கொள்ளப்படாததால் வெளியேறினார்.இ. காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான், இந்தத் தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது."இவ்வாறு கருணாநிதி கூறினார்.
சட்டசபை தீர்மானம்
நிருபர் கேள்வி:- கச்சத் தீவு பற்றிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்றால், தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுபற்றி ஐகோர்ட்டிலும் வழக்குத் தொடரவேண்டும் என்று ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் கருத்து தெரிவித்து இருக்கிறாரே.
கருணாநிதி பதில்:- கோர்ட்டுக்கு போவதுபற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. சட்டசபையை கூட்டுவது பற்றி யோசிக்கலாம்.
அதிகாரி
கேள்வி:- டெல்லி சர்க்கார் வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல் சிங் உங்களைச் சந்தித்த போதே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப் போவதாக சொன்னாரா?-
கருணாநிதி:- அப்போது அகதிகள் பிரச்சினை பற்றிதான் பேச வந்திருந்தார். இது முக்கியமாகப் பேசப்படவில்லை. அப்போதே தமிழ்மக்கள் இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் கூறி இருக்கிறேன்.
திருத்தம்
கேள்வி:- ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதே. இனிமேல் எதுவும் திருத்தம் செய்ய முடியுமா?
கருணாநிதி:- மனம் உண்டானால் மார்க்கம் உண்டு செய்யலாம்.
ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்திலோ அல்லது முன்தின நாளோ, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ டெல்லிக்கு அழைத்து பேசி இருக்கலாம். இந்த மாநில அரசைக் கலந்து கொள்ளாவிட்டாலும், மிக முக்கியமான பிரச்சினையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையாவது அழைத்து பிரதம மந்திரி சர்வகட்சி கூட்டத்தை கூட்டி அவர்களது கருத்துக்களை அறிந்து இருக்கலாம். அப்படிச் செய்யாதது வருந்தத்தக்கது
ராஜினாமா
கேள்வி:- கச்சத்தீவு பிரச்சினைக்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று அ. தி. மு. க. வினர் கூறுகிறார்களே.
கருணாநிதி:- கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்ட இந்திராவை ராஜினாமா செய்யும்படி சொல்ல தைரியம் இல்லாதவர்கள் எங்களைப் பார்த்து ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்.
கேள்வி:- ஜனவரிக்குப் பிறகு கச்சத்தீவு பிரச்சினை பற்றி பிரதமரிடம் இருந்து பதில் ஏதும் வந்ததா?
கருணாநிதி:- எதுவும் வரவில்லை."
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-------------
தேதி: 04.07.1974
இலங்கைக்கு கச்சத்தீவு தானம்:"அரசியல் சட்டத்தால் ஏற்பட்ட அநீதி!" கருணாநிதி பேச்சு
சென்னை,
"கச்சத்தீவை இலங்கைக்கு, பிரதமர் இந்திரா காந்தி தானம் செய்தது, தமிழ்நாட்டின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக என்று கூற மாட்டோம். மாநிலத்தை கலக்காமல் மத்திய அரசு எதுவும் செய்யலாம் என்று அரசியல் சட்டத்தில் இருப்பதால், இப்படி செய்திருக்கிறார்" என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
பயிற்சி பாசறை
சென்னையில் கடந்த ஒரு வார காலமாக மாநில சுயாட்சி பயிற்சி பாசறை நடந்தது.
அதில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, நேற்று நடந்தது. அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
கச்சத்தீவு
"இன்று இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கச்சத்தீவு பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினையாக பேசப்படுகிறது. கச்சத்தீவு பிரச்சினைக்காக தொடர்ந்து நாம் வாதாடி வருகிறோம். அது இந்தியாவிற்கு சொந்தம். தமிழ்நாட்டிற்கு நெருக்கமான பகுதி. ஆகவே, இதை இலங்கைக்கு விட்டு தரக்கூடாது என்பதையும் சட்டப் பேரவையில் எடுத்து வைத்தோம்; இந்திரா காந்தி அம்மையாருக்கு விளக்கக் கடிதங்கள் மூலம், ஆதாரங்களை எழுதி, தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமல் வழங்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தோம். ஆனாலும் இன்று கச்சத்தீவு பறி போய்விட்டது என்கிற கவலை தோய்ந்த உள்ளத்தோடு தமிழ்ச் சமுதாயம் இருக்கிறது.
இழப்பு
இது இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புத்தான்; ஆனால் ஏதோ தமிழ்நாடு என்கிற ஒரு மாநிலத்திற்கு சொந்தமான ஒரு பகுதி. அது இலங்கைக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்பது இன்றைக்குச் சாதாரணமாகத் தெரியலாம்.சிலர் ஆரம்பத்தில், "கச்சத்தீவா? பறிபோய்விட்டதா? இன்னும் கருணாநிதியும், நாவலரும், மற்றவர்களும் ராஜினாமா செய்யாமல் இருக்கிறார்களா?" என்றெல்லாம் கேட்டார்கள். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் பார் என்றெல்லாம் தொடை தட்டினார்கள், தோள் தட்டினார்கள்.
இன்று காலை அவர்களுடைய உயிர் தோழரான கூட்டணி கட்சிக்காரர்கள்-கம்யூனிஸ்டு கட்சியினர், "கச்சத்தீவைக் கொடுத்ததுதான் சரி" என்கிற தீர்மானத்தை அகில இந்திய மட்டத்தில் நிறைவேற்றி, இங்கே அனுப்பி வைத்துவிட்டார்கள். தோள் தட்டியவர்கள் எல்லாம் இனி என்ன ஆவார்களோ, எனக்குத் தெரியாது.
அரசியல் சட்ட அநீதி
ஆனால் கச்சத்தீவை இந்திரா காந்தி தமிழ்நாட்டின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக இலங்கைக்குக் கொடுத்து விட்டார்கள் என்று நாம் வாதிடுபவர்களா என்றால் இல்லை. தமிழ்நாட்டின் மீதுள்ள வெறுப்பு, இங்கேயுள்ள அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணம் காரணமாக இந்திரா காந்தி இந்த காரியத்தினை செய்தார்கள் என்று நாங்கள் சொல்லவும் இல்லை; சொல்லப் போவதுமில்லை.
இந்தத் தவறைச் செய்தது இந்திரா காந்தியா என்றால் இல்லை. இந்தத் தவறு எப்படி விளைந்தது என்றால் இன்றைக்கு இருக்கிற அரசியல் அமைப்பில் தமிழ்நாடு அல்லது ஒரு மாநிலம். அதை மதித்து, அந்த மாநிலத்தின் பகுதியை இன்னொரு மாநிலத்தோடு சேர்க்க வேண்டுமா? அல்லது இதுபோல் இன்னொரு நாட்டிற்குக் கொடுத்துவிட வேண்டுமா? அப்படிப்பட்ட அதிகாரத்தை, மாநிலங்களை கலக்காமல், அவர்களுடைய ஒப்புதலைப் பெறாமல் செய்யலாம் என்ற அக்கிரமமான நிலை இன்றுள்ள அரசியல் சட்டத்தில் இருக்கிறது.
சொந்தம் இல்லை
அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவு என்ன சொல்கிறது?
மாநிலம், மாநிலத்திற்கே சொந்தமில்லை; அதுதான் இந்த 3-வது பிரிவின் பொழிப்புரை.மாநிலத்தின் பெயரை மாற்றி விடலாம், பாராளுமன்றத்திலே உள்ளவர்கள்-மத்திய சர்க்கார்.மாநிலத்தின் எல்லைக்கோட்டை அழித்து வேறு கோடு போட்டு விடலாம்; ஒரு மாநிலத்தை துண்டு துண்டாக ஆக்கி அல்லது கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து ஒரு புது மாநிலத்தை உருவாக்கலாம்; ஒரு மாநிலத்திலே இருந்து ஒரு பகுதியை எடுத்து சேர்த்து இன்னொரு மாநிலத்தைப் பெரிதாக விரிவுபடுத்தலாம்; ஒரு மாநிலத்திலே இருந்து ஒரு பகுதியை எடுத்து விட்டு சிறிதாக ஆக்கலாம்; இப்படி ஐந்து உரிமைகள் மாநிலத்தின் நிலப்பரப்பைப் பொறுத்தவரையில், ஆக்கவும் அழிக்கவும் கூடிய உரிமை அரசியல் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி மத்திய சர்க்காரின் கையிலே இருக்கிறது.
பாராளுமன்றத்திலே ஒரு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி விடலாம். பாராளுமன்றத்திலே தீர்மானமென்றால், அதுவும் எப்படியென்றால், மூன்றில் இரண்டு பங்கு ஆதரிக்கும் அந்த பெரும்பான்மை அல்லவா அங்கே கணக்கிடப்படும் என்றெல்லாம் சந்தேகிக்கத் தேவையில்லை. இந்த விஷயத்திற்கு பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை போதுமானது.
அதாவது பாராளுமன்றத்திலே மொத்த உறுப்பினர்களுடைய எண்ணிக்கை 500-க்கு மேற்பட்டதாகும். சபை நடப்பதற்கு குறைந்தது 56 பேர் இருந்தாக வேண்டும்.ஒரு மாநிலத்தின் எல்லைக் கோட்டை அழிக்கலாம் என்பதற்கோ, பெயரை மாற்றலாம் என்பதற்கோ புது மாநிலம் உருவாக்கலாம் என்பதற்கோ, பெரிதாக ஆக்குவதற்கோ அல்லது மாநிலத்தை சிறிதாக ஆக்குவதற்கோ இந்த 56 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 29 பேர் வாக்களித்தால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற முழுமையான அதிகாரத்தை இன்று மத்திய சர்க்கார் பெற்றுள்ளது. இதை நீங்கள் மனதிலே கொள்ள வேண்டும். ஆக மாநிலம், மாநிலத்திற்குச் சொந்தமானதல்ல; மத்திய சர்க்கார் கையில் அவர்கள் எப்படி கத்தியை எடுத்து வெட்டினாலும், கேக்கை வெட்டுவது போல வெட்டி, யார் யாருக்கு வேண்டுமானாலும், பிறந்த நாள் விழாவில் கொடுப்பது போல கொடுக்கலாம்.ஆக்கவும், அழிக்கவும் முழு ஆற்றலே, சக்தியை இன்றைய மத்திய அரசுக்கு அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது.எனவேதான், அரசியல் சட்டத்தில் பெரிய மாற்றம் செய்ய வேண்டும் என்கிறோம்."
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
மாதவன்
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பிய தொழில் அமைச்சர் மாதவன், இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினார்."பல நாடுகளில் மாநில சுயாட்சி கொடுக்கப்பட்டு இருப்பதை என்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது நேரில் கண்டேன்" என்று அவர் கூறினார்.விழாவுக்கு நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். முரசொலி மாறனும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.தொடக்கத்தில் நாகநாதன் வரவேற்றுப் பேசினார்.
121 பேர்
சுயாட்சி பாசறையில் கலந்துகொண்டு பயிற்சிபெற்ற 121 பேர்களுக்கு, கருணாநிதி நற்சான்று இதழ்களை வழங்கினார்.விழா, எழும்பூர் பெரியார் திடலில் நடந்தது.
----------
தேதி: 05-07-1974
கச்சத்தீவு தானம்: தடை செய்ய சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை,
தமிழ்நாட்டுக்கு அருகேயுள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு டெல்லி சர்க்கார் தானம் செய்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இப்படி தானம் செய்வது சட்ட விரோதம். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் கூறப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை, இலங்கைக்கு கொடுக்க செய்ய, டெல்லி சர்க்கார் முடிவு செய்துள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில், பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.
செல்லாது
இந்த ஒப்பந்தம் செல்லாது என்றும், இந்த ஒப்பந்தத்தை அமுல் நடத்தக்கூடாது என்று டெல்லிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கை, தமிழ்நாடு ஜனசங்க செயலாளர் கே. கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்துள்ளார்.
வழக்கில் அவர் கூறி இருப்பதாவது:-
உரிமை இல்லை
(1) கச்சத்தீவு முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. எனவே, அது இந்தியாவின் ஒரு அங்கம், அப்படி இந்தியாவின் அங்கமாக உள்ள எந்த பகுதியையும், பிற நாட்டுக்கு தானம் செய்ய எவருக்கும் அதிகாரம் கிடையாது.
(2) கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்று டெல்லி சர்க்கார் ஏற்கனவே கூறி வந்திருக்கிறது. அதற்கு முரணாக, இலங்கைக்கு கச்சத்தீவை தானம் செய்திருப்பது செல்லாது.
சட்ட விரோதம்
(3) பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலும், அரசியல் சட்டத்தை திருத்தாமலும், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை.
(4) இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் போய்வர, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. கச்சத்தீவுக்கும் போக உரிமை உண்டு. ஆனால், இலங்கையுடன் டெல்லி சர்க்கார் செய்துள்ள ஒப்பந்தத்தால், அந்த உரிமை பறிக்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.மேற்கண்டவாறு வழக்கில் கூறப்பட்டு உள்ளது.
************************
தேதி: 12-07-1974
கச்சத்தீவு தானம்: இ. கம்யூனிஸ்டு ஆதரவு!
மதுரை,
கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்ததை ஆதரித்து இடது கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு கிளை தீர்மானம் நிறைவேற்றியது.
"கச்சத்தீவு மிகச் சிறியது. மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை, குடிப்பதற்கு தண்ணீர்கூட கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட தீவை இலங்கைக்கு கொடுத்ததன் மூலம், இந்தியாவுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை" என்று தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
-------
16.07.1974
கச்சத்தீவில் ராணுவ தளம் அமைக்க வழிவிடுவதா? கருணாநிதி கண்டனம்!!
தஞ்சை,
"கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்ததால், அங்கு இலங்கை ராணுவ தளம் அமைக்கக் கூடிய அபாயம் உள்ளது" என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
கண்டன நாள்
கச்சத்தீவை இலங்கைக்கு டெல்லி சர்க்கார் கொடுத்ததை கண்டித்து, தமிழகம் எங்கும் "கண்டன நாள்" நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-விருகம்பாக்கம் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா பேசியபோது தமிழ் மொழியும், தமிழ்நாடும் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.
அந்தத் தமிழகத்தின் ஒரு பகுதிக்குத்தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அதைத் தடுக்கவும் மேலும் ஆபத்து வராமல் பாதுகாக்கவும்தான் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் போர்க் கோலம் பூண்டிருக்கிறது.பண்டுதொட்டுத் தமிழர்க்குச் சொந்தமானதாக இருந்த கச்சத்தீவை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் சொந்தமானதாக இருந்த கச்சத்தீவை-ராமநாதபுரம் வாசிகள் மீன் பிடிக்கச் செல்லும் இடமாக இருந்த கச்சத்தீவை-இந்தியாவின் மிக முக்கியப் பகுதியான கச்சத்தீவைப் பற்றிய பேருண்மைகளை எல்லாம் நாம் எடுத்துச் சொல்லியிருந்தும்-இந்தியப் பிரதமர் அதனை இலங்கைக்குச் சொந்தமானது என்று தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்.
இந்தியப் பகுதி
இலங்கையின் தேசப் படத்தில் இந்த கச்சத்தீவு 1954 வரையிலும் இடம் பெறாமல் இருந்தது. அப்படி இடம் பெறாதிருந்த கச்சத்தீவு-தமிழகத்தோடும் இந்தியாவோடும் சேர்ந்திருந்த நிலப் பரப்பாகும்.அந்தப் பகுதியை நம்மிடம் சொல்லாமலே கூட இலங்கைக்கு இந்தியப் பிரதமர் ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளார்.
இது வெளிநாட்டு விவகாரம்தான் என்றாலும்-தமிழகத்தின் ஒரு பகுதி இலங்கைக்குத் தரப்படுகிற காரணத்தால் நாம் இந்த எதிர்ப்புக் குரலை எழுப்புகிறோம்.இப்போது மட்டுமல்ல. இது பிரச்சினை ஆனபோதே அவ்வப்போது நாம் கச்சத்தீவு பற்றிச் சொன்ன கருத்துகளை எல்லாம் மத்திய அரசு புறக்கணித்துள்ளது. ஆனால் இப்போது என்ன நிலைமை?
ராணுவ தளம்
கச்சத்தீவை இலங்கைக்குத் தானம் செய்தவர்களைக் கேட்கிறேன்-இன்று போகட்டும்; நாளை ஒரு நிலைமை இப்படி உருவானால் என்ன ஆகும் என்று கேட்கிறேன்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பகை வருகிறது. அப்படி ஒரு நிலை உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம் அல்லது அந்த நிலையை இன்று இலங்கையோடு நேசம் கொண்டிருக்கும் சீனா ஏற்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது என்ன ஆகும்?
தமிழகத்துக்கு ஆறு கல் தொலைவில் உள்ள இந்தக் கச்சத்தீவைத் தளமாகக் கொண்டு அவர்கள் தாக்க ஆரம்பித்தால் முதலில் பாதிக்கப்படுவது தமிழகமாகத் தானே இருக்க முடியும்?தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்குவதற்காக அவர்கள் நாம் தானம் கொடுத்த இதே கச்சத்தீவில் கப்பல் தளத்தை உருவாக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
காக்க வேண்டும்
இப்போது பிரதமராக இருக்கும் இந்திரா காந்தி, அப்படி ஒரு நிலை உருவாகும்போது தாம் பிரதமராக இருக்கப் போவதில்லை என்று வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். என்றாலும் எதிரிகள் பாசறைக்கு, இந்தக் கச்சத்தீவு தளமாக அமையாது என்பதற்கு என்ன உறுதி?அப்படிப்பட்டதொரு பேராபத்து தமிழகத்துக்கு ஏற்படக்கூடாது. அதிலிருந்து தமிழகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறோம்.இந்தியாவிலிருந்து 1500 மைல் தொலைவில் ஒரு குட்டித் தீவு. டெய்கோ கார்ஷியா என்று பெயர். அங்கே அமெரிக்கா ராணுவ தளம் அமைத்தது.
அப்போது பிரதமர் என்ன செய்தார்?
போகட்டும்-அமெரிக்கா ராணுவத் தளத்தை அமைக்கட்டும் என்று விட்டாரா? இல்லையே, எதிர்ப்புக் குரல் கிளப்பினார். கண்டனம் தெரிவித்தார். இந்தியாவின் அருகே அமெரிக்காவின் கப்பல் தளமா? என்று குரல் கொடுத்த இந்திரா அம்மையார், ஆறு மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவினை அப்படிப்பட்ட பேரபாயச் சூழ்நிலைகள் எல்லாம் வரக்கூடும் என்று நினைக்காமல் இலங்கைக்குத் தானம் கொடுத்தது என்ன நியாயம்?நமக்கு ராணுவத் தளமாக இருக்க வேண்டிய கச்சத்தீவை இலங்கைக்குத் தந்திருக்கிறார்களே... எதிர்கால ஆபத்தை மனதில் வைத்துத்தான் இப்படிச் செய்திருக்கிறார்களா?
கேட்க விரும்புகிறேன்.
இங்கே சிலர் "கச்சத்தீவு இலங்கைக்குத் தரப்பட்டுவிட்டதா? அதற்குக் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்" என்கிறார்கள்!அரசியல் அரிச்சுவடியே தெரியாமல், வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக் கொண்டிருப்பவர்-சொல்கிறார்; "கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று.அவருக்கு கச்சத்தீவு போனால் என்ன? உலகமே அழிந்தால் என்ன? "கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்"-இதுதான் அவருடைய கூப்பாடு.சில பக்தர்கள் படுத்தாலும், தூங்கினாலும், எழுந்தாலும், நடந்தாலும், "முருகா முருகா" என்று சொல்லிக் கொண்டிருப்பதைப் போல எந்த நேரமும் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்-"கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்!" என்று.கச்சத்தீவை கொடுத்தது யார்? கருணாநிதியா? இல்லை.கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது இந்திரா அம்மையார். அப்படிக் கொடுத்தது தப்பு என்று கண்டிப்பது கழக ஆட்சி.கச்சத்தீவை கொடுத்ததைக் தடுக்க அரசியல் சட்ட அடிப்படையில் நமக்கு உரிமை உண்டா? இல்லை. அந்த உரிமையைப் பெறுவதற்காகத்தான் நாம் மாநில சுயாட்சி கேட்கிறோம்.கொடுத்தவர்களையும் விட்டுவிட்டார்கள். பறித்தவர்களையும் விட்டுவிட்டார்கள். தடுக்க முயன்றவர்களைப் பார்த்து கேட்கிறார்கள்; பதவி விலக வேண்டுமாம். இது என்ன நியாயம் என்று புரியவில்லை."இவ்வாறு கருணாநிதி கூறினார்.கூட்டத்துக்கு துணை சபாநாயகர் கணபதி தலைமை தாங்கினார்.
தேர்
பாபநாசம் நகர தி. மு. க. சார்பில், வெள்ளியால் செய்யப்பட்ட "மனுநீதி சோழன் தேர்", கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.மறைந்த தி. மு. க. தொண்டர் கோவிந்தன் குடும்ப நிதியாக, ஒன்றிய கழகத்தின் சார்பில் ரூ. 1,000 வழங்கப்பட்டது.
**************
தேதி: 17.07.1974
கச்சத்தீவு தானம்: டெல்லிக்கு நோட்டீசு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு!!
சென்னை,
கச்சத்தீவை இலங்கைக்கு டெல்லி சர்க்கார் தானம் செய்தது செல்லாது என்று, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது அல்லவா? இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, டெல்லி சர்க்காருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
"கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்தது சட்ட விரோதம். இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று நீதிபதி எம். எம். இஸ்மாயில் முன்னிலையில், பரிசீலனைக்கு வந்தது.வழக்கை தொடர்ந்துள்ள கே. கிருஷ்ணமூர்த்தி (தமிழ்நாடு ஜனசங்க செயலாளர்) நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
டெல்லி மந்திரி பதில்
வழக்குக்கு ஆதரவாக டெல்லி மேல்-சபை நடவடிக்கை குறிப்பு ஒன்றை அவர் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.டெல்லி மேல்-சபையில் 1973 மார்ச் 1-ந் தேதி டெல்லி சர்க்கார் வெளிநாட்டு இலாகா மந்திரி சுரேந்திர பால்சிங் பேசுகையில், "கச்சத்தீவு முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. எனவே அது இந்தியாவுக்கு சொந்தமானது" என்று கூறியதாக கிருஷ்ணமூர்த்தியின் குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நோட்டீசு
வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். டெல்லி சர்க்காருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
******************
தேதி: 20.07.1974
திருமதி பண்டாரநாயக் அறிவிப்பு: கச்சத்தீவில் பெட்ரோல் கிணறு! ரஷிய உதவியுடன் இலங்கை அமைக்கும்!!
கொழும்பு,
"கச்சத்தீவில், ரஷிய உதவியுடன் பெட்ரோல் கிணறு அமைக்கப்படும்" என்று இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் அறிவித்தார்.
பெட்ரோல் கிணறு
தமிழ்நாட்டுக்கு சொந்தமான, ராமேசுவரம் அருகே உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு டெல்லி சர்க்கார் தானமாக கொடுத்துவிட்டது அல்லவா? இந்த தீவில் பெட்ரோல் கிணறு தோண்ட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இதுபற்றி, இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் கூறியதாவது:-
ரஷிய உதவி
"கச்சத்தீவுக்கு மேற்கே ½ மைல் தூரம்வரை இப்போது பெட்ரோல் கிணறு தோண்டப்படுகிறது. இதற்கு ரஷியா உதவி செய்து வருகிறது.விரைவில் இது கச்சத்தீவுக்கும் விரிவு படுத்தப்படும். அங்கு பெட்ரோல் கிணறு அமைக்கப்படும்."மேற்கண்டவாறு திருமதி பண்டாரநாயக் கூறினார்.
*******************
தேதி: 21.07.1974
இலங்கைக்கு"கச்சத்தீவை கொடுத்தது சரிதான்!"இந்திரா காந்தி பேச்சு!!
புதுடெல்லி,
"கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக கொடுத்தது சரிதான்" என்று பிரதமர் இந்திரா காந்தி கூறினார்.
கச்சத்தீவு தானம்
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக கொடுப்பதாக, இலங்கை அரசாங்கத்துடன் இந்திரா காந்தி ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.
இதற்கு, தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இ. காங்கிரஸ் மாநாடு
ஆனால், டெல்லியில் நடைபெறும் இந்திரா காங்கிரஸ் மாநாட்டில், இந்த ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு பிரதிநிதிகளும், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை ஆதரித்து பேசினார்கள்.
பிறகு பிரதமர் இந்திரா காந்தி பேசும்போது, கச்சத்தீவு பற்றிக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:-
இழப்பா?
"கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததன் மூலம், நாம் எதையும் இழந்துவிடவில்லை. "ஒரு சிறு பாறைமீது உரிமை" என்கிற வார்த்தையை மட்டுமே கொடுத்து இருக்கிறோம்.இதன் மூலம், அந்தப் பகுதியில் பாரம்பரியமாக நமக்குள்ள கலாசார தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
சரிதான்
ஆகவே, இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தது சரிதான்."இவ்வாறு இந்திரா காந்தி பேசினார்
*********
தேதி: 24.07.1974
கச்சத்தீவு ஒப்பந்த விவரம்!
புதுடெல்லி,
கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய அறிக்கையை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தகராறு
"தமிழ்நாட்டில் இருந்து 12½ மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 10½ மைல் தூரத்திலும் இருக்கும் கச்சத்தீவில் இலங்கையை சேர்ந்தவர்களோ, இந்தியாவை சேர்ந்தவர்களோ எப்பொழுதும் நிரந்தரமாக குடி இருந்தது இல்லை.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கச்சத்தீவு, இந்தியாவுக்கு சொந்தமா அல்லது இலங்கைக்கு சொந்தமா என்ற பிரச்சினை இருந்தது.அதன்பிறகு, ஒரு தீர்மானமான முடிவு ஏற்படும் வரை கச்சத்தீவை இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
நேரடிப் பேச்சு
இரண்டு நாடுகளும் ஒரு பிரச்சினையை பேசி தீர்க்க முடியாவிட்டால் வேறு யாராவது மூன்றாவது நபர் தலையிட்டு சமரசம் செய்து வைக்க வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அண்டை நாடு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல் நேரடியாக பேசித் தீர்த்துக்கொள்ளவே விரும்புகிறது.
கச்சத்தீவு பற்றி தமிழ்நாடு, கோவா, பம்பாயிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள பழைய தஸ்தாவேஜுகளின் ஆதாரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆதாரங்கள் பற்றி இரண்டு நாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக பேச்சு நடத்தி வந்தனர்.
நியாயம்
கச்சத்தீவு அமைந்து இருக்கும் பாக் ஜலசந்தி பற்றி இரண்டு நாடுகளுக்கும் எல்லைத் தகராறு வரக்கூடாது என்பதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிவிட்டது.இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டது நியாயமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்."
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஒப்பந்த விவரம்
இந்தியா-இலங்கை ஆகிய நாடுகள் இடையே கச்சத்தீவு பற்றி ஏற்பட்ட ஒப்பந்தம் விவரம் வருமாறு:-"ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம், என்றாலும் அந்த தீவுக்கு இந்திய மக்கள் போவதற்கு "பாஸ்போர்ட்" (அனுமதி) வாங்க வேண்டியது இல்லை.கச்சத்தீவு அமைந்து இருக்கும் கடல் பகுதியில் (பாக் ஜலசந்தி) இரண்டு நாட்டு மீனவர்களும் முன்போல மீன் பிடிக்கலாம். இரண்டு நாட்டு படகுகளும் அந்த பகுதியில் வழக்கம்போல் தடை இல்லாமல் போய் வரலாம்.
சுரங்கம்
பாக் ஜலசந்தியில் புதிதாக எல்லை பிரிக்கப்பட்டு இருக்கும் பகுதியை மீறி இந்தியாவோ, இலங்கையோ எண்ணை கிணறு தோண்ட விரும்பினால் இரண்டு நாடுகளும் கலந்து பேசி கூட்டு முயற்சியுடன் எண்ணை வளம் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்."
மேற்கண்டவாறு கூறப்பட்டு உள்ளது.
**************
தேதி: 24.07.1974
பாராளுமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார்! உறுப்பினர் ஆவேசம்!!
புதுடெல்லி,
தமிழ் மாநிலத்திற்கு சொந்தமான கச்சத்தீவை, இலங்கைக்கு டெல்லி சர்க்கார் தானம் செய்ததற்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை, ஒரு உறுப்பினர் ஆவேசமாக கிழித்து எறிந்தார். எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாட்டுக்கு அருகே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை இலங்கைக்கு டெல்லி சர்க்கார் கொடுத்து உள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.
விவாதம்
இந்த ஒப்பந்தத்தின் நகலை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் நேற்று தாக்கல் செய்தார்.அப்போது அதன் மீது காரசாரமான வாக்குவாதம் நடந்தது.
சட்டவிரோதம்
இரா. செழியன் (தி. மு. க.) பேசுகையில், "தமிழ்நாட்டுக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்ட விரோதமானது. இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்" என்றார்.
மூக்கையா தேவர்
மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) பேசியதாவது:-
"என்னுடைய ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியது கச்சத்தீவு. அதை இலங்கைக்கு கொடுத்தது தவறானது; அரசியல் சட்டத்துக்கு எதிரானது.ஏற்கனவே, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தொல்லை கொடுத்து வருகிறது. எதிர்காலத்தில் போர் மூண்டால், இந்தத் தீவை இந்தியாவுக்கு எதிரான களமாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது."இவ்வாறு மூக்கையா தேவர் கூறினார்.
வாஜ்பாய்
ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில், "இலங்கைக்கு கச்சத்தீவை தானம் செய்யும் பேரம் ரகசியமாக நடந்து இருக்கிறது. இலங்கையின் நட்பைப் பெறுவதற்காக கச்சத்தீவை தூக்கிக் கொடுத்திருப்பதாக கூறுவது கேவலம்!" என்று கூறினார்.மதுலிமாயி (சோசலிஸ்டு), பி. கே. தேவ் (சுதந்திரா), முகமது செரீப் (முஸ்லிம் லீக்), நாஞ்சில் மனோகரன் (அ. தி. மு. க.) ஆகியோரும் ஒப்பந்தத்தை கண்டித்துப் பேசினார்கள்.
மந்திரி பதில்
வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் பதில் அளிக்கையில், "இந்தியா-இலங்கை நட்பு வளர இந்த ஒப்பந்தம் உதவும். இரு தேசங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது" என்று கூறினார்.
வெளிநடப்பு
ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி. மு. கழகம், சுதந்திரா, பழைய காங்கிரஸ், சோசலிஸ்டு, முஸ்லிம்லீக், ஜனசங்கம், அ. தி. மு. க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.எதிர்க்கட்சிகளில் வலது கம்யூனிஸ்டு, இடது கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும் கலந்துகொள்ளவில்லை.
ஒப்பந்தம் கிழிப்பு
சபையைவிட்டு வெளியேறும்போது, கச்வாய் என்ற ஜனசங்க உறுப்பினர் கச்சத்தீவு ஒப்பந்த நகலை கிழித்து சபையில் வீசி எறிந்தார்.இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்-சபை
டெல்லி மேல்-சபையிலும், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.விவாதத்தின்போது எஸ். எஸ். மாரிசாமி (தி. மு. க.) பேசுகையில் "கச்சத்தீவு பற்றி, தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசாமலேயே ஒப்பந்தத்தில் டெல்லி சர்க்கார் கையெழுத்திட்டு இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு" என்று கூறினார்.
மக்கள் கருத்து
ராஜ் நாராயணன் (சோசலிஸ்டு) பேசுகையில், "ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்குமுன் தமிழ் மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்" என்று கூறினார்."ஒப்பந்தத்தை தமிழகம் ஒருபோதும் ஏற்காது" என்று அப்துஸ் சமது (முஸ்லிம் லீக்) கூறினார்.
கம்யூனிஸ்டு ஆதரவு
கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்."இந்த ஒப்பந்தம், இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது" என்று பூபேஷ்குப்தா (வ. கம்.) கூறினார்.முடிவில் வ. கம்யூனிஸ்டு, இ. கம்யூனிஸ்டு கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இலங்கையில் மகிழ்ச்சி
இலங்கை பாராளுமன்றம் நேற்று கூடியது. கச்சத்தீவை இலங்கைக்கு பெற்றுத்தந்ததற்காக, திருமதி. பண்டாரநாயக்கை உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.திருமதி. பண்டாரநாயக் பேசுகையில், கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு கண்டதற்காக இந்திரா காந்தியை பாராட்டுவதாக தெரிவித்தார்.சமரசம் ஏற்பட டெல்லி வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் மிகவும் உதவியதாக அவர் சொன்னார்.
----
தேதி 22-08-1974
கச்சத் தீவை"இலங்கைக்கு கொடுக்கக்கூடாது" தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
சென்னை,
"கச்சத்தீவை இந்தியாவுக்கு சொந்தமாக்கும் வகையில், ஒப்பந்தத்தை மாற்றி அமைக்கவேண்டும்" என்று தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேறியது.
கச்சத்தீவு
தமிழ்நாட்டிற்கு அருகே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை, இலங்கைக்கு டெல்லி சர்க்கார் தானம் செய்தது.
இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக்கும் கையெழுத்திட்டனர்.
தீர்மானம்
இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவை இந்தியாவுக்கு சொந்தமாக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று, சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.முதல்-அமைச்சர் கருணாநிதி, இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில், மத்திய அரசு எடுத்துள்ள முடிவுபற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசுரிமை இருக்கும் வகையில், இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க முயற்சி எடுத்து; தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது."இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
விவாதம்
தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கந்தசாமி (பார்வர்டு பிளாக்), கே. ஏ. வகாப் (முஸ்லிம் லீக்), ஏ. ஆர். மாரிமுத்து (இ. காங்.), வி. கிருஷ்ணமூர்த்தி (தி. மு. க.), ஆலடி அருணா (அ. தி. மு. க.), சத்திய வாணிமுத்து, (தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்), மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சி), ஏ. ஆர். பெருமாள் (பார்வர்டு பிளாக்), பொன்னப்பநாடார் (ப. காங்.), என். கே. பழனிசாமி (வ. கம்.), ஏ. எம். ராஜா (தி. மு. க.) ஆகியோர் பேசினார்கள்.
கருணாநிதி பதில்
விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
"இந்த தீர்மானத்தை பெரும்பாலோர் வழிமொழிந்தும், சிலர் அரசு மீது பழி மொழிந்தும் பேசினார்கள்.
இதில் உள்ள வாசகங்கள் அனைத்துக்கட்சிகளும், ஏற்றுக்கொள்ளத்தக்க வாசகங்களாகும்.ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்கத் தேவை இல்லை. "மத்திய அரசோ-அல்லது அங்குள்ள அமைச்சர்களோ கூறும் கூற்றுதான் மேலானது-உண்மையானது-மாநில அமைச்சர்கள் கூற்று தவறானது" என்ற துரதிஷ்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஒப்புதல் பெறவில்லை
நாம், கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு மாநில அரசின் ஒப்புதல் பெறவில்லை. பிரதமர் இதற்கான வாய்ப்பை உருவாக்கி தரவில்லை என்பதை பல தடவை கூறி உள்ளேன்.
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கூட இது குறித்து பிரதமருக்கு பல தடவை எழுதிய கடிதத்தை எடுத்து கூறினேன்.
அனைத்துக் கட்சி
கச்சத்தீவு ஒப்பந்தம் வெளியானதும் ஜூன் 29-ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதன் முடிவை பிரதமருக்கு அனுப்பினேன். (கடித நகலை முதல்-அமைச்சர் படித்து காட்டினார்) ஆனால், டெல்லி மந்திரி ஒருவர், "இந்த ஒப்பந்தம் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எதுவும் வரவில்லை" என்று கூறியதும் கழகத்தை எதிர்ப்பவர்கள்-மாநில அரசு சொன்னதை நம்பாமல், இந்த அரசை தாக்கி பேசுகிறார்கள்.
ஒருமனதாக
தமிழர்கள் ஏகோபித்த குரலை வெளிப்படுத்தினோம் என்று தெரிவிக்க, இதை ஒருமனதாக ஆதரியுங்கள்.
இப்போதும் சொல்கிறேன். கச்சத்தீவு இலங்கைக்கு கொடுத்தது பத்திரிகையை பார்த்துத்தான் எனக்குத் தெரியும். சூசகமாகக்கூட அவர்கள் தெரிவிக்கவில்லை.
எனவே, இந்த செய்தியை பார்த்து பதறிப்போய் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
விளக்கம்
கோவை செழியன் (அ. தி. மு. க.): வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னால் முதல்-அமைச்சரிடம் ஒரு விளக்கம் கேட்க விரும்புகிறேன். கச்சத்தீவு தமிழ்நாட்டுடன் சேர வேண்டும் என்பதில், ஆளும் கட்சிக்கு இருக்கும் ஆர்வத்தில் எங்கள் ஆர்வம் குறைந்தது அல்ல. தீர்மானத்தில் மத்திய அரசு மட்டும் பொறுப்பு என்பதுபோல் இருப்பது தவறு. மாநில அரசும் இந்த பிரச்சினையில் தீவிரம் காட்டவில்லை என்பது எங்கள் குற்றசாட்டு. அதை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டால், தீர்மானத்தை ஆதரிக்கத் தயார். மாநில அரசின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.
கருணாநிதி:- நான் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்த பிரச்சினையில் மாநில அரசு எப்படி அணுகியது, எத்தனை கடிதங்கள் அனுப்பியது என்ற விவரங்களை தேதி வாரியாக தந்து இருக்கிறேன். மாநில அரசு தனது கடமையை நிறைவேற்ற-தயங்கவில்லை.
தமிழகத்தில் குரல்
கோவை செழியன்:- மாநில அரசு மத்திய அரசு மீது குற்றம் சாட்டி இந்த தீர்மானத்தை......
கருணாநிதி:- கடைசியாக ஒரு வேண்டுகோள். மாநில அரசு அக்கறை காட்டவில்லை என்ற தீர்மானத்தை கட்சிக் கூட்டத்தில் போடுங்கள். ஆனால் இங்கே ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி தமிழகத்தின் குரலை மத்திய அரசுக்கு வெளிப்படுத்தலாம்.
வெளிநடப்பு
ஆலடி அருணா (அ. தி. மு. க.):- மத்திய அரசு மீது குற்றம் சாட்டும் விதத்திலும் தனது பொறுப்பை தட்டி கழிக்கும் விதத்திலும் இந்த தீர்மானம் இருப்பதால் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு கூறிவிட்டு, அ. தி. மு. க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தார்கள்.பிறகு ஓட்டு எடுப்பு நடந்தது.குரல் ஓட்டு மூலம் தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் புலவர் கோவிந்தன் அறிவித்தார்.
மேல்-சபையில்
கச்சத்தீவு பற்றிய தீர்மானத்தின் மீது, மேல்-சபையிலும் நேற்று விவாதம் நடந்தது.விவாதத்துக்குப் பின், தீர்மானம் நிறைவேறியது.