நெருக்கடியான காலத்தில் நெருப்பாற்றில் நீந்தி வந்தது தி.மு.க. - தஞ்சையில் கி.வீரமணி பேட்டி
|நெருக்கடியான காலத்தில் நெருப்பாற்றில் நீந்தி வந்தது தி.மு.க. என தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வின் வரலாறு என்ன? அண்ணாமலையின் வயது என்ன? தி.மு.க. நெருக்கடியான காலத்தில் அழிந்துபோகும் என கூறினர். ஆனால் அந்த கட்சி நெருப்பாற்றில் நீந்தி வந்தது. இந்த வரலாறு புதிதாக வந்த அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை. பரிதாபத்துக்குரிய அளவுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்.
யாரெல்லாம் செய்த தியாகத்தை, காங்கிரஸ் செய்த தியாகத்தை எல்லாம் தாங்கள் தான் செய்ததாக காட்டி கொள்ள வேண்டிய அளவிற்கு பா.ஜ.க.வினர் சுதந்திர தின பவள விழாவை கொண்டாடுகின்றனர். அவர்களுடைய தலைவர்கள் யார்? யார்? தியாகம் செய்தனர் என்பதை காட்டுவதற்கு ஒருவர் கூட இல்லை.
தேசியக்கொடி பொருத்தப்பட்டிருக்கும் காரை கூட செருப்பை வீசி கேவலப்படுத்துகின்றனர். இந்தநிலையில், அமைச்சரை கைது செய்ய வேண்டும் என முதல் நாளில் அண்ணாமலை பேசுகிறார். அனைவரும் கண்டனம் தெரிவித்த பிறகு அடுத்த நாளில், செய்தது தவறு என்றும், அதை நியாயப்படுத்தவில்லை எனவும் பின் வாங்குகிறார். எனவே, அண்ணாமலையின் ஒவ்வொரு பேச்சும் தி.மு.க.வுக்கு நாள்தோறும் 100 வாக்குகளைச் சேர்த்துக் கொடுக்கிறது. அவர் தினமும் பேசட்டும்.
கல்வி தொலைக்காட்சியில் ஆர்.எஸ்.எஸ்.ஐ சேர்ந்த மணிகண்ட பூபதி நியமிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. சில நேரங்களில் உள்ளே அதிகார வர்க்கத்தில் இன்னமும் பழைய சாயல் இருக்கிறது. நிறைய ஊடுருவல்கள் நிகழ்ந்திருப்பது இன்னும் வெளியாகவில்லை. அதன் விளைவாக தான் இது நிகழ்ந்துள்ளது என்றாலும், அவ்வப்போது எங்களைப் போன்றவர்கள் கண்டறிந்துவிடுகின்றனர். அதுகுறித்து முதல்-அமைச்சரும் தெளிவாக கூறிவிட்டார். நியமனம் செய்வதற்கு முன்பாகவே தவிர்க்கப்பட்டுவிட்டது.
பேட்டியின்போது டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் சொக்கா.ரவி மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.