< Back
மாநில செய்திகள்
வடலூரில் இன்று ஜோதி தரிசனம்
கடலூர்
மாநில செய்திகள்

வடலூரில் இன்று ஜோதி தரிசனம்

தினத்தந்தி
|
5 Feb 2023 12:15 AM IST

வடலூாில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்திய ஞானசபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோதி தரிசனம் நடக்கிறது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

வடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 152-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 7.30 மணிக்கு வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லத்திலும், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லத்திலும், வடலூர் தர்மசாலையிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேள, தாள இசையுடன் வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது உருவப்படத்தை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சுமந்தபடி பார்வதிபுரம் கிராம மக்கள் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைக்கு காலை 10 மணியளவில் வந்தனர். அவர்களை சபையின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.

பல்லக்கில் சீர்வரிசை பொருட்கள்

பின்னர் அங்கு பல்லக்கில் உள்ள பொருட்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் பல்லக்கை சுமந்தபடி சீர்வரிசை பொருட்களுடன் கொடிமரம் அருகில் வந்தனர்.

அப்போது ஜோதிக் கொடியே ஆனந்த சொரூபக்கொடியே ஜோதியுருப்பாதிக் கொடியே ஜோதி வலப்பாகக்கொடியே என்ற கொடி பாட்டை (சிற்சித்தி வணக்கம்) சன்மார்க்க அன்பர்கள் பாட மஞ்சள், வெண்மை நிறத்துடன் கூடிய இருவண்ண கொடியேற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தர்மசாலை மேடையில் மதியம் 1 மணிக்கு திருஅருட்பாஇசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது.

இன்று ஜோதி தரிசனம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்தியஞான சபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதன்படி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணி என 6 காலங்களில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்துக்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்துள்ளனர்.

விழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஞானசபை உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைத்தும் போலீசாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்