சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்
|சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி எம் துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி முனிஷ்வரி பண்டாரிநாத் வரும் 12 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இருப்பார் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி துரைசாமி கடந்து வந்த பாதை
சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் எம். துரைசாமி, கடந்த 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தார். இவர் இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்று 1987ஆம் அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் குழுமத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எசு. வெங்கடாசலமூர்த்தியின் கீழ் இளநிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1997 முதல் 2000 வரை மத்திய அரசின் நிலை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட்டின் தற்காலிக நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2011 ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், தற்போது சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.