மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசின் வீடும் வரவில்லை - உதயநிதி ஸ்டாலின்
|சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையறிந்த நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
'மகளிர் மேம்பாடு' எனும் கலைஞரின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.