நாமக்கல்
பள்ளி மாணவர்களுக்கு ஜூடோ போட்டி
|நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு ஜூடோ போட்டி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு எடை பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் நேற்று பாரதி மேல்நிலைப்பள்ளியில் குத்துசண்டை போட்டியும், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டேக்வாண்டோ போட்டியும், செவ்வந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரோடு சைக்கிளிங் போட்டியும், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.