< Back
மாநில செய்திகள்
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் 26-ம் தேதி தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் 26-ம் தேதி தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
23 Feb 2024 10:56 PM IST

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வருகிற 26-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அதன்படி, வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்ததை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் வருகிற 26-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார்.




மேலும் செய்திகள்