< Back
தமிழக செய்திகள்
2 ஆண்டாக காப்பகத்தில் தவித்த குழந்தைக்காக மனம் இரங்கிய நீதிபதிகள்: தத்தெடுத்த தம்பதியிடமே ஒப்படைக்க உத்தரவு
தமிழக செய்திகள்

2 ஆண்டாக காப்பகத்தில் தவித்த குழந்தைக்காக மனம் இரங்கிய நீதிபதிகள்: தத்தெடுத்த தம்பதியிடமே ஒப்படைக்க உத்தரவு

தினத்தந்தி
|
3 Sept 2022 2:18 AM IST

உரியவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தால் 2 ஆண்டாக பெண் குழந்தை காப்பகத்தில் தவித்தது. இதனால் மனம் இரங்கிய நீதிபதிகள், தத்தெடுத்த தம்பதியிடமே குழந்தையை ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் குப்பல் நத்தத்தை சேர்ந்தவர் காசிவிசுவநாதன். இவர் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் உப்புகுடா பகுதியில் சாலையோர இட்லி கடை நடத்தி வந்தார். அப்போது அவருக்கும், மகாதேவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் பெண் குழந்தையை கடந்த 2018-ம் ஆண்டு தத்தெடுத்தனர். ஆனால் தத்தெடுத்தல் சட்டத்தின்படி பதிவு செய்யவில்லை. பின்னர் அவர்கள் குழந்தையுடன் மதுரை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்து வசித்தனர்.

இந்தநிலையில் குழந்தையை சட்டவிரோதமாக மதுரைக்கு அழைத்து வந்ததாக காசிவிசுவநாதன்-மகாதேவி மீது குழந்தைகள் நலக்குழு சார்பில் சேடப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

காப்பகத்தில் குழந்தை

கடந்த 7.2.2020 அன்று அந்த குழந்தையை, குழந்தைகள் நலக்குழுவினர், கருமாத்தூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே தன்னிடம் குழந்தையை ஒப்படைக்கக்கோரி, குழந்தையின் தந்தை ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, குழந்தையின் பெற்றோரான ரமேஷ்-ரேணுகா அல்லது காசிவிசுவநாதன்-மகாதேவி தம்பதியிடம் ஒப்படைப்பது குறித்து குழந்தைகள் நலக்குழு மற்றும் சிறார் நீதிக்குழுமம் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் காசிவிசுவநாதன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வருத்தம்

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

குழந்தையை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு பிறப்பித்த உத்தரவை 2 ஆண்டுகளாக நிறைவேற்றாதது வருத்தத்தை தருகிறது. பெற்றெடுத்தவர்களையும், தத்தெடுத்தவர்களையும் விட்டுவிட்டு அந்த பெண் குழந்தை காப்பகத்தில் வாடுகிறாள்.

இந்த சூழ்நிலையில் நாங்கள் உத்தரவிட்டதன்பேரில் குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இங்கு அந்த குழந்தை மகாதேவியுடன் மட்டும் ஒன்றியிருந்ததை கண்டோம். காரணமின்றி குழந்தையை நீண்டநாளாக காப்பகத்தில் வைப்பது அவளை மனதளவில் பாதிக்கும். அவளது தந்தை ரமேஷ் தானாக முன்வந்துதான் காசிவிசுவநாதன்-மகாதேவி தம்பதியிடம் குழந்தையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். சில விதிகளை பின்பற்ற தவறியதை காரணமாக வைத்து, அந்த குழந்தையை அரசு வளர்க்க முடியாது.

குழந்தை என்பது கடத்தல்காரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை போன்ற பண்டம் அல்ல. இந்த உண்மையை மதுரை சிறார் நீதிக்குழுமம் உணர்ந்திருக்க வேண்டும்.

தத்தெடுத்தவர்களிடம் ஒப்படைப்பு

எனவே அரசியலமைப்புச்சட்டம் எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி குழந்தையை காசிவிசுவநாதன்-மகாதேவி தம்பதியிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம். அவர்கள் விதிமுறைகளை பின்பற்றி தத்தெடுத்தல் சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் சிறார் நீதிக்குழுமம் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்