நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை நீதிபதிகள் விரைவாக விசாரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி அறிவுரை
|பல ஆண்டுகள் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வழக்காடிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால், வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அறிவுரை வழங்கினார்.
தலைவர்கள் படம்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மெட்ராஸ் பார் அசோசியேஷன் என்ற பழமையான வக்கீல் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், மறைந்த மூத்த வக்கீல்கள் எம்.ராகவன், (முன்னாள் அட்வகேட் ஜெனரல்) கே.அழகர்சாமி, மத்திய பிரதேச ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி குமார் ராஜரத்தினம் ஆகியோரது புகைபடங்கள் திறப்பு விழா ஐகோர்ட்டில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சி.நாகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு புகை படங்களை திறந்து வைத்தனர்.
நீதிபதிகள்
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா உள்ளிட்ட நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள், வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர்.கமலநாதன் வரவேற்று பேசினார். செயலாளர் டி.சீனிவாசன் நன்றியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், நீதித்துறை சீர்திருத்தங்களின் தற்போதைய நிலை-சர்வதேச பார்வை என்ற தலைப்பில் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மக்கள் நீதிமன்றம்
நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாகநிலுவையில் உள்ளது. இதை தடுக்கவே, நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது, மாதந்தோறும் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்த உத்தரவிட்டேன்.
இப்போதும், நாடு முழுவதும் இந்த லோக் அதாலத் சிறப்பாக நடந்து வருகிறது. கொரோனா காலத்தில் தொய்வு ஏற்பட்டது. ஆனால், கீழ் நீதிமன்றங்களில் சிவில் வழக்குகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வருகிறது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டும் அப்பீல் வழக்குகள், ஐகோர்ட்டில் 10 ஆண்டுகள், சுப்ரீம் கோர்ட்டில் 15 ஆண்டுகள் என்று நிலுவையில் இருக்கின்றன. இதனால் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பாதிப்பு மட்டுமல்ல, நீதிமன்றம் மீதான நம்பிக்கையை அவர்கள் இழக்க நேரிடும்.
விரைவான விசாரணை
எனவே, தொழிலாளர் வழக்கு, செக் வழக்கு, சொத்துகள் தொடர்பான வழக்கு, குடும்ப நல வழக்கு உள்ளிட்ட இந்த வழக்குகளை நீண்ட காலம் நிலுவையில் வைக்காமல், அந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். வழக்குகளை விரைந்து விசாரிக்க கீழ் கோர்ட்டு நீதிபதிகளுடன், ஐகோர்ட்டு நீதிபதிகள் அவ்வப்போது கலந்துரையாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.