< Back
மாநில செய்திகள்
செக் மோசடி வழக்கில்   கல்வி அறக்கட்டளை செயலாளருக்கு ஒரு ஆண்டு சிறை   ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

செக் மோசடி வழக்கில் கல்வி அறக்கட்டளை செயலாளருக்கு ஒரு ஆண்டு சிறை ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
24 Nov 2022 12:15 AM IST

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கிருஷ்ண தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). தொழில் அதிபர். இவர் ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை செயலாளராக இருந்த ராசிபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கு ரூ.25 லட்சம் கடனாக கொடுத்திருந்தார். இந்த பணத்திற்காக சந்திரசேகரன் ரூ.15 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என 2 காசோலைகளை ராஜனிடம் கொடுத்தார். இதையடுத்து காசோலைகளை ராஜன் வங்கியில் செலுத்தி இருந்தார். ஆனால் சந்திரசேகரன் கொடுத்த 2 காசோலைகளும் பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து ராஜன், சந்திரசேகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் பதில் எதுவும் அனுப்பவில்லை.

இதனால் ராஜன் ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சந்திரசேகரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், காசோலைகள் தொகையான ரூ.25 லட்சத்தை நஷ்டஈடாக ராஜனுக்கு ஒரு மாதத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்றும், தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி ரெஹனா பேகம் தீர்ப்பளித்தார்.

அறக்கட்டளை நிர்வாகி ஒருவருக்கு கோர்ட்டில் செக் மோசடி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பில் ராசிபுரம் அருகே ஆயில்பட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சந்திரசேகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்