திருப்பூர்
2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை
|திருப்பூர் அருகே வடமாநில தொழிலாளர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர் அருகே வடமாநில தொழிலாளர்களை கத்தியால் வெட்டி செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூரை அடுத்த மங்கலம் தட்டாம்பாறையில் உள்ள கல்குவாரியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சாஜல் மண்டல் (வயது 37), அவரது நண்பரான பீகார் மாநிலத்தை சேர்ந்த உகன் முக்கியா (27) ஆகியோர் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 13-1-2022 அன்று தாங்கள் வேலை செய்த நிறுவனத்தின் முன்பு நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான மணிகண்டன் (33), அவரது நண்பரான கோவை மாவட்டம் சூலூர் காடம்பாடியை சேர்ந்த சக்திவேல் (25) ஆகியோர் கத்தியுடன் வந்து இருவரிடமும் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
சாஜல் மண்டல் பணம் கொடுக்க மறுக்கவே, மணிகண்டன், சக்திவேல் இருவரும் சேர்ந்து கத்தியால் சாஜல் மண்டலின் தலை, கைகள், காலில் வெட்டினார்கள். அத்துடன் அவரிடம் இருந்து 1 செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்கள். தடுக்க முயன்ற உகன் முக்கியாவுக்கும் கத்தி வெட்டு விழுந்தது. அங்கிருந்த குமார் என்பவரிடமும் செல்போனை அவர்கள் இருவரும் பறித்து சென்றார்கள்.
7 ஆண்டு சிறை
இதுகுறித்து மங்கலம் போலீசார் கூட்டுக்கொள்ளை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சக்திவேல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் மணிகண்டன், சக்திவேல் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பஷீர் அகமது ஆஜராகி வாதாடினார்.