< Back
மாநில செய்திகள்
மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை இணை மந்திரி நாராயணசாமி ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை இணை மந்திரி நாராயணசாமி ஆய்வு

தினத்தந்தி
|
30 Jun 2023 12:16 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை இணை மந்திரி நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அம்ரித் சரோவர் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.

மத்திய இணை மந்திரி ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் களரம்பட்டியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் ரூ.44.07 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள குளத்தினையும், அம்மாபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் (100 நாள் வேலை) மூலம் ரூ.14.08 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உணவு பொருட்களுக்கான சேமிப்பு கிடங்கினையும், ஆலம்பாடியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.21.02 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் மத்திய இணை மந்திரி நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைதொடர்ந்து அவர் கோனேரிபாளையத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீட்டின் உறுதித்தன்மை குறித்தும், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார்.

முறைகேடு

பின்னர் அவர் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கலெக்டா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தி விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, ஆர்.டி.ஓ. நிறைமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மஞ்சுளா, நாராயணன் மற்றும் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மத்திய இணை மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- அம்ரித் சரோவர் திட்டத்தில் இம்மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. 1 ஏக்கர் பரப்பளவில் குளம் வெட்டுவதற்கு ரூ.45 லட்சம் செலவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் மறுப்பு

ஜல் ஜீவன் திட்டத்திலும் தரமற்ற பி.வி.சி. குழாய்களை பொருத்தியுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் போதிய அக்கறை செலுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறுகையில், அம்ரித் சரோவர் திட்டத்துக்கு மத்திய அரசு தனியாக நிதி ஏதும் ஒதுக்கவில்லை. இதனால் நூறு நாள் வேலை திட்ட நிதியை கொண்டு மனித உழைப்பு மூலம் குளம் வெட்டப்பட்டது. அதனால் செலவு அதிகமாக ஆகியுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்துக்கான பி.வி.சி. குழாய்கள் தரமானவை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது, என்றனர்.

மேலும் செய்திகள்