ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டப்பணி விரைவில் தொடங்கும் -தமிழக அரசு அறிவிப்பு
|மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்து 97 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்து 97 கோடி மதிப்பில் நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 980 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1,227.23 கோடி மதிப்பீட்டிலும், மதுரை அலங்காநல்லூர் பகுதியில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,386.66 கோடி மதிப்பிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 667 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,062.20 கோடி மதிப்பீட்டிலும், ராமநாதபுரம்-திண்டுக்கல் மாவட்டங்களில் ரூ.3,850.76 கோடி மதிப்பிலும், விருதுநகர் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 286 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,191.05 கோடி மதிப்பிலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.854.37 கோடி மதிப்பீட்டிலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள 831 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.525.06 கோடி மதிப்பிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
விரைவில் தொடங்கும்
இந்த பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளது. சில பணிகளுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டப்பணிகள் அனைத்தும் உரிய விதிகளின்படி விரைவில் தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.