< Back
மாநில செய்திகள்
மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: 2,329 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மாநில செய்திகள்

மாவட்ட நீதிமன்றங்களில் வேலை: 2,329 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தினத்தந்தி
|
29 April 2024 2:58 PM IST

தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 329 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு உயர் நீதிமன்றம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விவரம் மற்றும் எண்ணிக்கை, கல்வித்தகுதிகள், முன்னுரிமைகள் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தனித்தனி அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி ஏதாவது ஒரு மாவட்டத்தில் தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது.அதே போல் தேர்வு செய்யப்படுவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் மிக கவனமாக மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

பணியிடங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

நகல் பரிசோதகர் -60 பணியிடங்கள், நகல் வாசிப்பாளர் - 11, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 100, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 242, கட்டளை எழுத்தர் - 1, ஒளிப்பட நகல் எடுப்பவர் - 53, டிரைவர்கள் - 27, நகல் பிரிவு உதவியாளர் - 16, அலுவலக உதவியாளர் - 638, தூய்மை பணியாளர் - 202, தோட்ட பணியாளர் - 12, காவலர் - 459, இரவு காவலர் மற்றும் மசால்ஜி - 85, காவலர் மற்றும் மசால்ஜி - 18, தூய்மை பணியாளர் மற்றும் மசால்ஜி- 1, வாட்டர் ஆண் - வாட்டர் பெண் - 2, மசால்ஜி - 402 ஆகும். ஆன்லைன் மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 27-ந் தேதி கடைசி நாளாகும். தேர்வு கட்டணத்தை (மே) 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். டூவீலர், கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

டிரைவர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், வாட்ச்மேன், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருந்தால் போதும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பு, கட்டண சலுகை உள்ளிட்ட விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

மேலும் செய்திகள்