சிவகங்கை
வீட்டின் முன்பு அமைத்த பெரியார் சிலை அகற்றம்: துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார் அதிரடி மாற்றம்
|வீட்டின் முன்பு அமைத்த பெரியார் சிலை அகற்றம் தொடா்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் உதயம் நகரில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புதிய வீடு கட்டி உள்ளார். வீட்டின் முகப்பில் மார்பளவு பெரியார் சிலையை அமைத்து இருந்தார். இந்த சிலையை திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி 29-ந் தேதி(அதாவது நேற்று) திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி தாசில்தார் கண்ணன், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) கணேஷ்குமார் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று உரிய அனுமதி பெற்றுதான் சிலையை வைக்க வேண்டும் என்று கூறி அதை அப்புறப்படுத்தினர். பின்னர் சிலையை காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர்.
இந்தநிலையில் காரைக்குடி தாசில்தார் கண்ணனை சிவகங்கை வனத்திட்ட அலுவலராக மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். அதேபோல் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமாரை சென்னை தலைமை அலுவலகத்திற்கு கட்டாய காத்திருப்புக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.