< Back
மாநில செய்திகள்
ஜெயங்கொண்டம் கல்லூரி மாணவி விவகாரம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
அரியலூர்
மாநில செய்திகள்

ஜெயங்கொண்டம் கல்லூரி மாணவி விவகாரம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

தினத்தந்தி
|
20 Oct 2023 12:56 AM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

இந்தநிலையில் கல்லூரி மாணவி விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வந்து புகார் அளித்தார். அந்த புகாரில், தான் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருவதாகவும், கடந்த 25-ந்தேதி கல்லூரி முடிந்ததும் தனக்கு தெரிந்தவர்களுடன் நின்று பேசிவிட்டு அவர்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததாகவும், அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவர்கள் தன்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போகும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் சிலால் பகுதியில் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டதால், தான் கூச்சல் போட்டு அருகே இருந்தவர்கள் உதவியுடன் காப்பாற்றப்பட்டதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

கீழே விழுந்து காயம்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண்ணுக்கு காதலன் இருப்பது தெரியவந்தது. மேலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தநிலையில், கடந்த 2 மாதங்களாக தனது காதலன் தன்னுடன் பேசாததால் மனமுடைந்த மாணவி, தனது தோழியிடம் வாழவே பிடிக்கவில்லை. எங்காவது சென்றுவிட தோன்றுவதாக கூறியுள்ளார். இதுபற்றி மாணவியின் தோழி, மாணவியின் காதலனிடம் கூறியுள்ளார்.

காதலன் தனது நண்பர்களிடம், மாணவியை சமாதானம் செய்து அழைத்து வர கூறியுள்ளார். ஆனால் அவர் சமாதானம் ஆகாததால் அவரை தோழியின் வீட்டிற்கு கொண்டு விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றபோது, வேகமாக சென்றதால் மாணவி கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். இதனால் அருகே இருந்த கடையில் குளிர்பானம் குடித்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்டதாக புகார்

ஏற்கனவே, அணைக்கரையில் உள்ள தோழி வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் மாணவி கூறியிருந்தார். இதனால் அவரை பெற்றோர் அங்கு சென்று தேடி பார்த்துவிட்டு திரும்பி வரும் வழியில் தனது மகள் வாலிபர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை பார்த்து சத்தம் போட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த மாணவர்களுடன் பெண்ணின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவி பெற்றோருடன் சென்றுவிட்டார்.

இந்த தகராறில் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்த பெண்ணின் பெற்றோர், காயம்பட்டவர் சார்பாக புகார் கொடுக்க நேரிடும் என்று எண்ணி, தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் விசாரணை செய்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி சம்பந்தப்பட்ட பெண் தனது பெற்றோருடன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, தள்ளுமுள்ளு நடந்ததை மிகைப்படுத்தி புகார் அளித்துள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் எழுதி கொடுத்துள்ளார். அதில் அவரது பெற்றோரும் கையொப்பமிட்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை

அதேபோல சிலால் கிராமத்தில் நடந்த தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி, காயமடைந்த நபர் அளித்த புகாரின் பேரில், தா.பழூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9-ந்தேதி முன் ஜாமீன் பெற்றுள்ளார்கள். இந்த இரு வழக்குகளும் விசாரணையில் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மேலும், இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்