திண்டுக்கல்
நவராத்திரி பூஜையில் அம்மனுக்கு அணிவித்த நகைகள் திருட்டு
|திண்டுக்கல்லில், நவராத்திரி பூஜையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட நகைகளை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நவராத்திரி பூஜை
திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியில் சக்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் அங்கு வழிபட்டு வருகின்றனர். மேலும் முக்கிய தினங்களில் நடைபெறும் பூஜைகளின் போது அம்மன்களுக்கு தங்கத்திலான தாலி அணிவிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றது. இதையொட்டி 3 அம்மன்களுக்கும் 2 பவுன் மதிப்பிலான தங்க தாலி அணிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ரவுண்டுரோடு பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
தாலி திருட்டு
இந்த நிலையில் நேற்று காலை பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அம்மன்களின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தாலிகளும் திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நவராத்திரி பூஜையில் அம்மன்களுக்கு தாலி அணிவிக்கப்பட்டதை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அதை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.