கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் மாயம் - அதிர்ச்சியில் மாஜிஸ்திரேட்
|ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட 6 சவரன் நகைகள் மற்றும் 3 ஆயிரத்து 255 ரூபாய் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட 6 சவரன் நகைகள் மற்றும் 3 ஆயிரத்து 255 ரூபாய் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 6 சவரன் நகையும், வேறு சில வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 255 ரூபாய் பணமும், இரும்பு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு, சார்நிலை கருவூலத்தில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தது.
ஒவ்வொரு முறையும் அந்த பெட்டி கோர்ட்டுக்கு எடுத்து வரப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு, வழக்கு தொடர்பான நகை மற்றும் பணம் எடுக்கப்பட்டு, மீண்டும் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். நேற்று, அந்த இரும்பு பெட்டியை கருவூலத்தில் இருந்து கோர்ட்டுக்கு எடுத்து வந்து பார்த்தபோது, சீல் அகற்றப்படாமல், இரும்பு கொக்கி உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
பெட்டியில் இருந்த நகை மற்றும் பணத்தை சரி பார்த்தபோது, 6 சவரன் நகை, 3 ஆயிரத்து 255 ரூபாய் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி, இதுகுறித்து கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.