கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் அருகே பட்டப்பகலில் துணிகரம் - விவசாயி வீட்டுக்குள் புகுந்து 25¾ பவுன் நகைகள் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|தியாகதுருகம் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டுக்குள் புகுந்து 25¾ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தியாகதுருகம்,
விவசாயி வீடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 62), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி அருள்மணி, மகன் பாஸ்கர், மருமகள் நவீனாஸ்ரீ ஆகியோருடன் அதே ஊரில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு விவசாய பணிகளை முடித்து விட்டு மீண்டும் குடும்பத்தினருடன் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனிவேல் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25¾ பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் பதறிய பழனிவேல் இதுபற்றி வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நகைகள் கொள்ளை
அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வரஞ்சரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகைகள் கொள்ளை போன வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழனிவேல் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டு கதவை திறந்து உள்ளே புகுந்ததுடன், கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 25¾ பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதனிடையே கைரேகை நிபுணர் ராஜவேல் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் ரேகைகள் மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் விவசாயி வீட்டுக்குள் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.