பெரம்பலூர்
பெண் விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
|பெரம்பலூர் அருகே பெண் விவசாயி வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
3 பவுன் நகை- ரூ.30 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகர் வடக்கு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அருக்காணி (வயது 36). இவர் அருகே உள்ள ஒருவருக்கு சொந்தமான வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று மதியம் 12.30 மணியளவில் அருக்காணி தனது வீட்டை பூட்டி விட்டு, அதன் சாவியை வீட்டிற்கு முன்புறம் நிறுத்தி இருந்த, அவரது ஸ்கூட்டரில் வைத்து விட்டு, சுற்றுச்சுவரின் கதவை பூட்டி விட்டு சாவியை எடுத்து கொண்டு வயலுக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.50 மணிக்கு வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சாவியை வைத்து கதவை திறந்து...
ஆனால் வீட்டின் சுற்றுச்சுவர் கதவின் பூட்டும், வீட்டின் கதவின் பூட்டும் உடைக்கப்படவில்லை. மர்மநபர்கள் நோட்டமிட்டு ஸ்கூட்டரில் இருந்த வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருக்காணி இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.