காஞ்சிபுரம்
சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை
|சுங்குவார்சத்திரம் அருகே மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
பிணமாக கிடந்தார்
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த குணகரபாக்கம் ஊராட்சி மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா (வயது 80). இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். யசோதாவின் மகன்கள், மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
யசோதா மட்டும் மேலேரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் யசோதா வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பின்புறம் யசோதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
கொலை
அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் யசோதாவின் வீட்டுக்குள் புகுந்து அவரை வீட்டின் பின் பக்கம் இழுத்து சென்று தாக்கி தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது.
நகை திருட்டு
மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்கநகை கொள்ளை போனது தெரியவந்தது. போலீசார் யசோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீசார் யசோதாவின் மகன்கள், மகள்கள், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.