திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை திருட்டு
|ஊத்துக்கோட்டை அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது திம்மபூபாலபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 42). இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து கிருஷ்ணவேணி பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (57). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை ஆடுகளை அருகே உள்ள புல்வெளிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் டி.வி. மீது வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.300 காணவில்லை. இதுகுறித்து ராஜன் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (57). இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் அரை பவுன் தங்க நகை திருடி சென்றனர். இந்த 3 கொள்ளை சம்பவங்கள் குறித்து பென்னலூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்தது திம்மபூபாலபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.