கன்னியாகுமரி
நாகர்கோவிலில் தேங்காய் வியாபாரி வீட்டில் நகை திருட்டு
|நாகர்கோவிலில், தேங்காய் வியாபாரியின் வீட்டில் கதவை உடைத்து 6¾ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், தேங்காய் வியாபாரியின் வீட்டில் கதவை உடைத்து 6¾ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேங்காய் வியாபாரி
வெள்ளிச்சந்தை அம்மாண்டிவிளை சாந்தான்விளை பகுதியை சேர்ந்தவர் கவியரசு (வயது 34), தேங்காய் வியாபாரி. இவர் தற்போது நாகர்கோவில் செட்டிகுளம் கணபதிநகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 10-ந்தேதியன்று கவியரசு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கவியரசு வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அதில் வைத்து இருந்த 6¾ பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கவியரசு கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், இரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வந்து வீடு முழுவதும் மோப்பம் பிடித்துவிட்டு, வெளியே சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தனிப்படை அமைப்பு
இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் திருட்டு நடந்த வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த திருட்டில் உள்ளூர் ஆசாமிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.