< Back
மாநில செய்திகள்
ராஜாக்கமங்கலம் அருகே நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

தினத்தந்தி
|
1 March 2023 6:45 PM GMT

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நகையை பறித்து விட்டு தப்பிய மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நகையை பறித்து விட்டு தப்பிய மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

நிதி நிறுவன பெண் ஊழியர்

குருந்தன்கோடு அருகே உள்ள கட்டிமாங்கோடு பட்டன்விளையை சேர்ந்தவர் ரத்தினகுமார் என்ற கண்ணன். பி.எஸ்.என்.எல். ஊழியரான இவருடைய மனைவி ஸ்ரீநிமதி (வயது 35). இவர் ஈத்தாமொழி புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இவர் பணி முடிந்ததும் மாலை 6.45 மணிக்கு ராஜாக்கமங்கலம் வழியாக ஸ்கூட்டரில் வீடு நோக்கி புறப்பட்டார். காக்காத்தோப்பு அருகே இருட்டான பகுதியில் அவர் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 2 பேர் திடீரென அவரை வழிமறித்தனர்.

நகை பறிப்பு

பின்னர் அவரை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். ஆனால் ஸ்ரீநிமதி நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் நகை 3 பாகங்களாக அறுந்தன. இதில் 2 பாகம் சாலையோரம் விழுந்தது. ஒரு பாகம் ஆசாமிகளின் கையில் சிக்கின.

இதற்கிடையே ஸ்ரீநிமதி திருடன், திருடன் என கூச்சலிட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே கிடைத்தது போதும் என நினைத்தபடி கையில் இருந்த நகையுடன் ஆசாமிகள் தப்பி விட்டனர். அந்த நகை சுமார் 1 பவுன் ஆகும்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

அதே சமயத்தில் கீழே விழுந்ததில் ஸ்ரீநிமதி காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியையும் போலீசார் ஆய்வு செய்தனர். தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் மர்மஆசாமிகள் நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்