< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
முகத்தில் மிளகாய் பொடியை தூவி வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு
|28 Jan 2023 2:04 PM IST
முகத்தில் மிளகாய் பொடியை தூவி வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவருடைய மனைவி சியாமளா.
நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் சியாமளா தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென சியாமளாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார்.
இதில் நிலை தடுமாறிய சியாமளா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்து இருந்த மோதிரம், வளையல் என 7½ பவுன் நகையை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர் தப்பி ஓடினார்.
இது குறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராஜன் (52) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.