காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
|ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணசாமி (வயது 35). இவர் இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இருங்காட்டு கோட்டை பகுதியில் வேலை முடித்து நடந்து சென்றபோது மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வந்து கிருஷ்ணசாமியை கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க நகை மற்றும் செல்போன் போன்றவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இது குறித்து கிருஷ்ணசாமி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த ராம்ராகுல் (21) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ராம் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.