தேனி
நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை:முகமூடி கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை:தேனி கோர்ட்டு தீர்ப்பு
|தேனி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
துப்பாக்கி முனையில் கொள்ளை
தேனி நகர் பெரியகுளம் சாலையில் ஒரு பிரபல நகைக்கடை செயல்பட்டு வந்தது. 2013-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் இந்த நகைக்கடைக்குள் புகுந்தான். அவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேல்நோக்கி சுட்டான். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பயத்தில் பலர் அலறினர். பின்னர் அந்த கொள்ளையன் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் இருந்த சுமார் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினான். நகைக் கடை ஊழியர்கள், பொதுமக்கள் அந்த கொள்ளையனை துரத்திச் சென்றனர்.
7 ஆண்டு சிறை
சிறிது தூரம் ஓடிய கொள்ளையனை மக்கள் மடக்கிப் பிடித்தனர். தகவல் அறிந்து போலீசாரும் அங்கு விரைந்தனர். கொள்ளையனை போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர். அந்த கொள்ளையனை போலீசார் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் உத்தமபாளையம் வாய்க்கால்பட்டியை சேர்ந்த ராஜா மகன் கேரளகுமார் என்ற பரமதுரை (வயது 46) என்பது தெரியவந்தது.
இந்த கொள்ளை வழக்கில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேனி சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணையை தொடர்ந்து நீதிபதி சுந்தரி நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் கேரளகுமார் என்ற பரமதுரைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கேரளகுமாரை கோர்ட்டில் இருந்து போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.