< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
விழுப்புரம்
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

தினத்தந்தி
|
23 March 2023 12:15 AM IST

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள், நகையை கொள்ளையடித்தனர். மேலும் 2 வீடுகளில் திருட முயற்சி செய்துள்ளனர்.

விழுப்புரத்தை அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 46). இவர் பெரம்பலூரில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வாரத்திற்கு சனி, ஞாயிறு மட்டும் எஸ்.மேட்டுப்பாளையம் வந்து செல்வார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகத்தின் மனைவி கலையரசி தனது மகன்களுடன் வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலை 5.30 மணியளவில் அவர் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உடனே வீட்டில் இருந்த சூட்கேசை பார்த்தபோது 2 சூட்கேசுகளும் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் தனது வீட்டின் பின்புற பகுதியில் தேடியபோது மலட்டாற்றின் கரையோர பகுதியில் கலையரசியின் 2 சூட்கேசுகளும் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்ததை பார்த்தார். அதன் அருகில் சென்று பார்த்தபோது அதில் வைத்திருந்த 4 பவுன் நகையும் மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவையும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை கடப்பாைரயால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்து சூட்கேசுகளை எடுத்துக்சென்று அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு சூட்கேசுகளை கீழே போட்டுவிட்டு தப்பிச்சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.

இதேபோல் கலையரசி வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சம்பந்தம், ராஜசேகர் ஆகியோரின் வீட்டு பின்பக்க கதவுகளையும் மர்ம நபர்கள் உடைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மின்விளக்கை போட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்