திருச்சி
நகைக்கடை மோசடி; உரிமையாளர்கள் மீது வழக்கு
|நகைக்கடை மோசடி; உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சியில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது. மேலும் மதுரை, சென்னை, கும்பகோணம், நாகர்கோவில், கோவை ஆகிய இடங்களிலும் அந்த நகை கடைகளை நடத்தி வந்தனர். இந்த நகைக்கடையில் நகை வாங்கினால் செய்கூலி சேதாரம் இல்லை எனவும், நகை சிறுசேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து, பல முதலீட்டாளர்களை சேர்த்துள்ளனர். மேலும் அவர்கள் செலுத்தும் முதலீட்டு தொகைக்கு 9 சதவீதம் வரை போனஸ் தருவதாக கூறியுள்ளனர். இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய பொதுமக்கள் பலர் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்த தொகைக்கான முதிர்வு தேதியின்போது அந்த நகைக்கடைக்கு சென்ற முதலீட்டாளர்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்டபோது திருப்பித்தராமல், மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து அந்த கடையின் வாடிக்கையாளர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அந்த கடையின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தெரிவித்துள்ளார்.