தேனி
முன்னறிவிப்பு இன்றி நகைகள் ஏலம்: தனியார் நிதி நிறுவனத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா
|கம்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் முன்னறிவிப்பு இன்றி நகைகளை ஏலம் விட்டதாக தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (35) கூலிதொழிலாளி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர், தனது மனைவியின் 8 பவுன் நகைகளை கம்பத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 3 பிரிவாக அடகு வைத்திருந்தார். இந்நிலையில் இன்று அந்த நகைகளை திருப்ப பணத்துடன் சென்றார். அப்போது கிளை மேலாளர் தங்களது நகைகள் ஏலம் விடப்பட்டதாகவும், கணக்கு மூடப்பட்டுள்ளதால் நகைகளை திருப்பி தர முடியாது என்றும் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது நகையை ஏலம் விடுவதற்கு முன்பாக எனக்கு முறையான அறிவிப்பு, தபால் ஏதும் வரவில்லை. மேலும் நகையை ஏலம் விட்டதற்கான ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டார். இதற்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல் மாலை 6 மணி வரை அவரை காத்திருக்க வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் தனது குடும்பத்துடன் நிதி நிறுவனத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் நிதி நிறுவன அதிகாரி கூறுகையில், தங்களது நிறுவனத்தில் ஏலம் முடிந்த கணக்குகளை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். நாளை (இன்று) ஒருநாள் அவகாசம் கொடுத்தால் கணக்கில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை தலைமை அலுவலக அதிகாரிகள் மூலம் சரிசெய்து தருவதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.