< Back
மாநில செய்திகள்
சோழவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சோழவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தினத்தந்தி
|
4 July 2022 10:11 AM IST

சோழவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியை சேர்ந்த நடுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (வயது 68). மண்பாண்டம் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்பொழுது அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை வைத்திருந்த பெட்டிகளை அள்ளிக்கொண்டு அருகில் இருந்த வயல்வெளிக்கு சென்றுள்ளனர்.

பின்னர், அங்கு அமர்ந்து அந்தப் பெட்டியில் இருந்த தங்க சங்கிலி, வளையல், கம்மல், மோதிரம், உள்ளிட்ட சுமார் 10½ பவுன் நகை, கால் கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி அருகே வேண்பாக்கம் கிராமம் சாம்பசிவம் நகரில் வசித்து வருபவர் லாரன்ஸ் ஜான் (62). இவரது வீட்டின் கீழ்தளத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக வேலை செய்து வரும் ஜீவிதா (35) என்பவர் தனது கணவர் அருன்ராஜசீலன் (39) என்பவருடன் வசித்து வந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஊட்டி அருகே உள்ள குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜீவிதா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இவரது வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் 3½ பவுன் தங்க நகையை திருடி விட்டு சென்றுள்ளனர். இதுபற்றி பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்