< Back
மாநில செய்திகள்
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
கரூர்
மாநில செய்திகள்

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

தினத்தந்தி
|
5 Jan 2023 11:57 PM IST

கரூர் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை-பணம் கொள்ளை

கரூர் அருகே உள்ள வாங்கபாளையம் பகுதிக்குட்பட்ட தீரன் சின்னமலை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52). இவர் அப்பகுதியில் சொந்தமாக பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இளங்கோவன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் வீட்டினுள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் உள்பகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் அவர் அலமாரியில் வைத்திருந்த 1 பவுன் தங்கநாணயம், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இளங்கோவன் வெங்கமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்