விழுப்புரம்
கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்கள் பறிப்பு
|விக்கிரவாண்டி அருகே கத்தி முனையில் 3 பேரிடம் நகை, செல்போன்களை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த ஈச்சங்குப்பத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 33). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மட்டப்பாறை பெட்ரோல் பங்க் அருகே தனது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் குமரேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதேபோல், செஞ்சி மாம்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (28). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் தனது டிராக்டரை முட்டத்தூர் அருகே நிறுத்திவிட்டு, அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவரது கையை கயிற்றால் பின்புறமாக கட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
நகை, பணம் பறிப்பு
மேலும், செஞ்சி கடம்பூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (34). விவசாயி. இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, பூண்டி அருகே சென்ற போது, அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பாஸ்கரனிடம் கத்தியை காட்டி மிரட்டி,
அவரிடம் இருந்த 2 செல்போன்கள், அவரது மனைவி அணிந்திருந்த கால் பவுன் தோடு, உறவினர் வீட்டு இல்ல விழாவுக்கு பையில் எடுத்து சென்ற ½ பவுன் நகை, ரூ.700 ஆகியவற்றை அவர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த 3 வழிப்பறி சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்து இருக்கிறது. இது தொடர்பாக அளித்த புகார்களின் பேரில், கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.