கடலூர்
கடலூரில் பெண்ணிடம் நகை, செல்போன் பறிப்பு 3 வாலிபர்கள் கைது
|கடலூரில் பெண்ணிடம் நகை, செல்போன் பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனா்.
நகை பறிப்பு
கடலூர் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சூர்யா (வயது 29). இவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்ததும், சூர்யா வீட்டுக்கு நடந்து சென்ற கொண்டிருந்தார். குண்டு சாலையில் சென்ற போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென சூர்யாவை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் சூர்யா அணிந்திருந்த வெள்ளி நகையை பறித்தனர். தொடர்ந்து அவரது கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றனர். இதில் பதறிய அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார்.
விசாரணை
இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பொதுமக்கள் திரண்டு வந்ததை பார்த்த 3 வாலிபர்களும், மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சூர்யா, புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சப்-இன்ஸ்பெக்டா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசாா் கடலூா் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
3 போ் கைது
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த மாறன் மகன் கோகுல்(19), ஆனந்தன் மகன் ஆகாஷ்(21), ஹரிதாஸ் மகன் மணிகண்டன்(19) என்பதும், அவர்கள் சூர்யாவிடம் வெள்ளி நகை மற்றும் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோகுல் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.