கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டையில்நகைக்கடையில் செயின் திருடிய வாலிபருக்கு வலைவீச்சு
|தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பஞ்சாயத்து ஆபீஸ் சாலையில் வசித்து வருபவர் நேமா ராம். இவர் தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் வாலிபர் ஒருவர் சென்று நகைகள் வாங்குவதற்காக நகைகளை காட்ட சொல்லி உள்ளார். அப்போது நேமா ராம் கடையில் இருந்த தங்க நகைகளை அவருக்கு ஒவ்வொன்றாக எடுத்து காட்டியுள்ளார்.
அதனை பார்த்து கொண்டிருந்த வாலிபர் திடீரென கடையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் 4 தங்க செயின்களை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தார். பின்னர் கடையின் வாசல் பகுதியில் தயாராக நின்ற இருசக்கர வாகனத்தில் ஏறிய அந்த வாலிபர் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார். அவர் ஓடி சென்றபோது திருடிய 4 தங்க செயின்களில் ஒரு செயின் மட்டும் கடையின் வாசலில் கீழே விழந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.. திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும், இது குறித்து கடை உரிமையாளர் நேமா ராம் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.