நாமக்கல்
தொழில்அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகை கொள்ளை
|புதுச்சத்திரம் அருகே பட்டப்பகலில் தொழில்அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழில்அதிபர் வீடு
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள தத்தாதிரிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 59). இவர் ஜவுளி மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு விஜயகிருஷ்ணா என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர். விஜயகிருஷ்ணா அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணனின் மகள் பவித்ராவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக நேற்று முன்தினம் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேலத்திற்கு பட்டுப்புடவை வாங்க சென்று இருந்தனர். அப்போது கிருஷ்ணனின் மாமனார் பழனிசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மதியம் 1 மணிக்கு பழனிசாமி, தனது வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் 3 மணிக்கு மகளின் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் கதவும், பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது.
நகைகள் கொள்ளை
மேலும் பீரோவில் இருந்த ஆடைகள் அனைத்தும் கலைந்து கிடந்ததோடு, நகைகள் கொள்ளை போயிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிசாமி, கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரும், குடும்பத்தினரும் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது தோடுகள், வளையல், மோதிரங்கள் என ஏராளமான நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தொழில்அதிபர் கிருஷ்ணன் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் 62 பவுன் நகைகள் கொள்ளை போனதாகவும், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் நவனி பள்ளிப்பட்டி பகுதியில் பலகார வியாபாரியான அன்பழகன் வீட்டிலும் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரி அன்பழகன் புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்பழகன் வீட்டில் சுமார் 8 பவுன் நகைகள் கொள்ளை போனதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
புதுச்சத்திரம் அருகே தொழில்அதிபர் மற்றும் பலகார வியாபாரி வீடுகளில் சுமார் 70 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.