< Back
மாநில செய்திகள்
மங்கலம்பேட்டை அருகே    விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை  பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை
கடலூர்
மாநில செய்திகள்

மங்கலம்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை

தினத்தந்தி
|
13 Oct 2022 12:15 AM IST

மங்கலம்பேட்டை அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் மனோகர் (வயது 36). விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி சுவாதியுடன் வயலுக்கு சென்றார்.

பின்னர் மதியம் 2 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோகர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தது.

ரூ.4 லட்சம்

மேலும் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

மேலும் கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து, வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். இதுதவிர அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி, நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்