கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே மகளிர் சுய உதவிக்குழு தலைவி வீட்டில் நகை-பணம் கொள்ளை: வாலிபர் கைது
|கள்ளக்குறிச்சி அருகே மகளிர் சுயஉதவிக்குழு தலைவி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன் மனைவி அமுதா (வயது 45). மகளிர் சுயஉதவிக்குழு தலைவி. இவர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் வசூல் செய்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் தனது மகளின் 2½ பவுன் நெக்லஸ் ஆகியவற்றை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அமுதா வீட்டை பூட்டிவிட்டு தனது கணவருடன் வெளியே சென்றார். பின்னர் அவர் மாலை 6 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அமுதா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம், நகையை காணவில்லை. அதனை மர்மநபர் யாரோ? கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அமுதா வீட்டை பூட்டி விட்டு கணவருடன் வெளியே சென்றதை நோட்டமிட்ட அதேஊரை சேர்ந்த பழனிசாமி மகன் அஜித்குமார் (22) என்பவர் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அஜித்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2½ பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் மீட்கப்பட்டது.