< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில்    2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை    மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
11 Aug 2022 5:06 PM GMT

விழுப்புரத்தில் 2 வீடுகளில் நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


நகை- பணம் கொள்ளை

விழுப்புரம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் முருகவேல் (வயது 32). இவர் விழுப்புரம் கே.கே.சாலையில் பூட்டு கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதை பார்த்து திடுக்கிட்ட அவர் பீரோவில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது அதில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், ஓட்டை பிரித்து உள்ளே குதித்து பீரோவை உடைத்து அதிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருச்சியை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் ராகுல்காந்தி (30). இவர் விழுப்புரம் நாராயணன் நகர் முல்லை தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 6-ந் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் வந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த பேக்கினுள் இருந்த 1 பவுன் மோதிரம், ரூ.8 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள், ஜன்னல் வழியாக குச்சி மூலம் பேக்கை எடுத்து அதிலிருந்த மோதிரம், பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் நகரில் ஒரே நாளில் 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்