கடலூர்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|சிதம்பரம் அண்ணாமலைநகரில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலைநகர் வடக்கு சாலியான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 63). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மறுநாள் வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த செல்லதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. செல்லத்துரை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.